

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும்,தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.
மக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 23-ந்தேதி அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, சென்னையிலிருந்து வரும் 21 முதல் 23ஆம் தேதி வரை 10,663 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில் தேர்தல் நாளன்று முதியோர்கள், கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை, வாக்காளர் பூத் சீலிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்தின்போது அவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையைக் காண்பித்தால், அவர்களுக்குப் பயணச்சீட்டு (டிக்கெட்) வழங்க வேண்டிய அவசியமில்லை. இந்த இலவசப் பயணச் சலுகை, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அவர்களுக்குப் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவசப் பயணச் சலுகையைப் பெறும் பயனாளிகளை, பேருந்துப் பணியாளர்கள் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவசப் பயணத்தை அனுமதிக்காவிட்டாலோ அல்லது முதியோர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் கட்டாயப்படுத்திப் பயணச்சீட்டு வாங்கச் செய்தாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.
அனைத்து வழித்தடங்களிலும் இலவசப் பயணம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஆய்வு அதிகாரிகளுக்கு (Checking Inspectors) உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறும், அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிட வேண்டுமென்று சேலம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.