

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் வாக்குச்சாவடியில் நடந்த சுவாராஸ்யமான அனுபவம்! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான மூன்று சுவாரஸ்யமான கட்டுரைகளில் முதல் கட்டுரை இதோ…
எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த வயதிலிருந்து, பொதுத்தேர்தல் நடைபெறும் நேரங்களில், எங்களூரில் எனது தந்தையார் பூத் ஏஜண்ட் ஆக இல்லாது தேர்தல் நடைபெற்றதில்லை. அவர் பூத்தில் இருக்கிறார் என்றால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளே உஷாராகி விடுவார்களாம். அந்த அளவுக்குத் துல்லியமாகக் கவனிப்பாராம்.
அப்பொழுதெல்லாம் வாக்குச் சீட்டுக்கள்தான். தேர்தல் முடிவுற்றதும், பெறப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் எவ்வளவு? உபயோகிக்கப்பட்டவை எத்தனை? அவற்றில் ஓட்டளித்த ஆண்வாக்காளர்கள் எத்தனை பேர்? பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்? சவாலான ஓட்டுக்கள் (Challenging Vote) ஏதேனும் போடப்பட்டிருந்தால் அவற்றின் விபரங்கள் ஆகியவை ஏஜண்டுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவை சரியாக டாலி (Tally) ஆகவேண்டும். அவை சரியாக இருந்தால் மட்டுமே எனது தந்தையார் ஓட்டுப் பெட்டிக்குச் சீலிட உடன்படுவாராம்.
பிரைசைடிங் ஆபீசர் என்றழைக்கப்படும் பூத்தின் உயர் மட்ட அலுவலரே அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாளே பள்ளிக்கு வந்துவிடும் தேர்தல் அதிகாரிகள், பள்ளி வாசலிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தை அளந்து, அங்கு சுண்ணாம்பால் ஒரு கோடு போட்டு விடுவார்கள். அதைத்தாண்டி யாரும் போகக்கூடாது என்று சொல்லி விடுவார்கள்.
எனக்குள்ளே அந்த வயதிலேயே ஒரு குறுகுறுப்பு தோன்றிக் கொண்டே இருக்கும். தேர்தல் வாக்குச் சாவடியில் அப்படி என்னதான் நடக்கும்? என்ற எண்ணம் உள் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும். காலங்கள் மாறி, நான் அரசுப் பணியேற்ற பிறகு வந்த முதல் தேர்தலில் எங்களுக்கும் தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டன. நண்பர்கள், சாக்குப் போக்கு சொல்லித் தப்பிக்க முயலுகையில், நான் ஆர்வமாக முன் வந்தேன். சென்னை பெரம்பூரின் ஒரு பள்ளியில் மூன்று நான்கு பூத்களில் எங்கள் பூத்தும் ஒன்று. எனக்கு போலிங் ஆபீசர்-1 (Polling Officer) பணியைத் தந்தார்கள்.
பூத்தின் தலைமை அலுவலர் பிரைசைடிங் ஆபிசர் (Presiding Officer) என்று அழைக்கப்படுவார். எனது பணியோ வாக்களிக்க வரும் வாக்காளரின் பெயர் விபரங்களை, பூத்தில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படிப் படித்தல். அப்பாவின் அனுபவம் காரணமாக நான் கணக்கை அடிக்கடி சரி பார்த்து வைத்தும், எந்த ஏஜண்டும் கணக்குகளைக் கேட்கவில்லை.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் எனக்குப் பதவி உயர்வு வந்து பிரைசைடிங் ஆபீசர் ஆகிவிட்டேன். பூத்தின் முழு கன்ட்ரோலுக்கும் பிரைசைடிங் ஆபீசரே பொறுப்பு. சென்னையின் தி.நகர்;ஆயிரம் விளக்கு;கோட்டூர்புரம், பசுமை வழிச்சாலை போன்ற பகுதிகளிலும், புறநகர்ப் பகுதியான அம்பத்தூரிலும் பணி தொடர்ந்தது. இரண்டு முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தியாகராய நகரின் ஒரு பூத்தில் காலை குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப் பதிவைத் தொடங்கி, சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். சுமார் 12 மணியளவில் வந்த பெரியவர் ஒருவர், தான் ஒரு பேராசிரியர் என்றும் தனது ஓட்டை யாரோ போட்டு விட்டதாகச் சொல்வதாகவும் தெரிவிக்க, நான் லிஸ்டைப் பார்த்தால் அவர் ஓட்டு முன்பே போடப்பட்டு விட்டதாக ‘டிக்’ ஆகியிருந்தது.
அப்பொழுது பட்டியலில் புகைப்படமெல்லாம் கிடையாது. அவரை அமரவைத்து விபரங்கள் கேட்டதில், அவர் உண்மையானவர் என்பது தெரிய வர, நான் எங்கள் பணியை விளக்க, அவரோ இங்குள்ள ஏஜண்டுகள் நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும் என்றார். உண்மையும் அதுதான். பூத் ஏஜண்டுகள் லோகல் பீப்பிளாக இருப்பதன் நோக்கமே அதுதானே! அப்புறம் அவருக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வேறொரு தேர்தல் சமயத்தில், கோட்டூர் புரத்திலுள்ள ஒரு பள்ளியின் பூத். நண்பகலைத்தாண்டி விட்ட நேரம். ஓட்டளிக்க வரும் பெரும்பாலோர் காலை, மாலை வேளைகளில்தான் அதிகமாக வருவார்கள். அந்த வாக்குச் சாவடியிலும் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரியவர் தன் உதவியாளருடன் வந்து போலிங் ஆபீசர்-1 இடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.
பெரியவர் சற்றே களைத்து காணப்பட்டார். உடனடியாக நான் எழுந்துபோய் அவரை அழைத்து உட்காரவைத்து, என்ன பிரச்னை என்று வினவ,’தான் தனது வீட்டிற்கருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றதாகவும், அங்குள்ளோர் அங்கு ஓட்டில்லை என்று இங்கு அனுப்பியதாகவும்’ கூறினார். அவர் முகவரியைக் கேட்ட பிறகு நான் எனது கையிலிருந்த லிஸ்டில் அவர் பெயரைத் தேடினேன். எங்குமே அவர் பெயர் தென்படவில்லை. சக பணியாளர்களையும் நன்கு தேடச் சொன்னேன்.
எங்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகத்தில் அவர் பெயரே இல்லை. முகவரி தவறாக இருந்தாலுங்கூட, லிஸ்டில் பெயர் இருந்தால் வாக்களிக்க அனுமதி வழங்கலாம். என்னால் அவருக்கு உதவ முடியாது போனதற்காக இன்று வரை வருந்துகிறேன். பின்னர் மன வருத்தத்துடன் அவரிடம் எங்கள் நிலையை எடுத்துரைக்க, அவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு விடை பெற்றுச்சென்றார். அந்தத் தேர்தலில் அவர் ஓட்டளித்தாரா என்று இன்று வரை மனது ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பெரியவர் பிரபல பாடகர் நாகூர் அனிஃபா அவர்கள்தான்!