

இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்திய அரசு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில ஆப்-களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையில் அரசு சேவைகளை எளிதாகவும் காகிதமில்லாமலும் (Paperless) பெற, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஸ்மார்ட்போனிலும் கட்டாயம் இருக்க வேண்டிய 5 முக்கியமான அரசு செயலிகள் (Apps) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டிஜிலாக்கர் (DigiLocker):
உங்கள் முக்கிய ஆவணங்களை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்த செயலி நீக்குகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான டிஜிட்டல் ஆவண சேமிப்புத் தளமாகும்.
இதன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இந்த ஒரு தளத்தில் நீங்கள் டிஜிட்டல் வடிவில் சேமிக்கவும், சரிபார்க்கவும், பகிரவும் முடியும். இது ஒரு அரசு ஆப் என்பதால் நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சேமித்து வைக்கலாம். இதன் மூலம் அசல் ஆவணங்களை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
எம்-ஆதார் (mAadhaar):
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ செயலியான இது, ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் விரல் நுனியில் வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையை எப்போதும் மொபைலில் வைத்திருக்கவும், முகவரியை மாற்றவும், ஆதார் அட்டையின் நிலையை (Status) அறியவும் முடியும். உங்கள் கைரேகை மற்றும் கருவிழித் தரவுகளை (Biometrics) மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்த செயலியின் மூலம் அவற்றை 'லாக்' (Biometric Lock) செய்து பாதுகாக்க முடியும்.
உமாங் செயலி (UMANG App):
இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நூற்றுக்கணக்கான சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஒருங்கிணைந்த செயலி இதுவாகும். பி.எஃப் (EPFO) இருப்புத் தொகையைச் சரிபார்த்தல், பணம் எடுத்தல், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு, ஓய்வூதிய சேவைகள், மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் வருமான வரி தொடர்பான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம். தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இதைப் பயன்படுத்த முடியும்.
நெக்ஸ்ட் ஜென் எம்-பரிவாஹன் (NextGen mParivahan):
வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மிகவும் அவசியமான செயலியாகும். இது தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கிய இந்திய அரசின் அதிகாரப்பூர்வ போக்குவரத்து சேவை மொபைல் செயலி ஆகும். இதில் வாகனம் தொடர்பான அதாவது உங்களுடைய RC புக், இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் போன்ற எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக எடுக்க முடியும். இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடைய ஆவணங்களை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இது போன்ற ஆவணங்கள் தேவைப்பட்டால் நெக்ஸ்ட் ஜென் எம்-பரிவாஹன் ஆப் மூலம் உங்களுடைய டிஜிட்டல் ஆவணங்களை காட்டினால் போதுமானது.
மேலும் அகில இந்திய அளவில் வாகனப் பதிவு எண் மூலம் உரிமையாளர் பெயர், பதிவுத் தேதி, வாகன வகை, எரிபொருள் வகை, காப்பீடு மற்றும் தகுதிச் சான்றிதழ் (Fitness) காலாவதி விவரங்களைச் சரிபார்க்கலாம். இரண்டாவது கை (Second-hand) வாகனம் வாங்கும்போது அதன் விவரங்களைச் சரிபார்க்கவும், நிறுத்தப்பட்ட அல்லது திருடுபோன வாகன விவரங்களைத் தேடவும், போக்குவரத்து விதிமீறல் மற்றும் விபத்துத் தகவல்களைப் பதிவிடவும், போக்குவரத்து அறிவிப்புகள் மற்றும் அருகிலுள்ள ஆர்.டி.ஓ / போக்குவரத்து அலுவலக இருப்பிடங்களைக் காணவும் பயன்படுத்தலாம்.
பீம் யுபிஐ (BHIM UPI) அல்லது 112 இந்தியா (112 India):
பீம் யுபிஐ (BHIM UPI- Bharat Interface for Money) - இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட, பாதுகாப்பான, விரைவான மற்றும் எளிமையான பணப் பரிவர்த்தனைகளுக்கு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியாகும். எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள விளம்பரங்கள் இன்றி வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பவும், பில்களைச் செலுத்தவும் இது உதவுகிறது.
ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லாதவர்களும் *99# என்ற USSD குறியீட்டைப் பயன்படுத்தி அடிப்படை போன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
112 இந்தியா (112 India) - இந்திய அரசின் அவசர காலப் பாதுகாப்பிற்கு (ERSS - Emergency Response Support System) மிகவும் முக்கியமான செயலியாகும். அவசர காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காவல்துறை (100), தீயணைப்புத் துறை (101), ஆம்புலன்ஸ் (108), மற்றும் பெண்கள் பாதுகாப்பு (1091) ஆகிய அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம். ஆபத்தான சூழ்நிலையில் SOS பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு உங்கள் இருப்பிடத் தகவலுடன் (GPS Location) உடனடி எச்சரிக்கை அனுப்ப முடியும்.
முக்கிய குறிப்பு: இந்த செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது, Google Play Store அல்லது Apple App Store-ல் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டாளர் (எ.கா: National e-Governance Division, UIDAI, NIC) பெயரைச் சரிபார்த்துப் பதிவிறக்கம் செய்யவும்.