

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அவ்வகையில் நேற்று திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது, இம்முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார்.
இதன்படி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டதாரிகள், மருத்துவர்கள், முனைவர்கள் மற்றும் சட்டம் பயின்றவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 18 பெண் வேட்பாளர்களுக்கு திமுக இம்முறை வாய்ப்பு வழங்கியுள்ளது
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஆக மொத்தம் 175 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகுதி:
* பட்டதாரிகள் - 125 பேர்
* சட்டப் படிப்பு பயின்றவர்கள் - 29
* பொறியியல் பட்டதாரிகள் - 17
* மருத்துவர்கள் - 15 பேர்
* முனைவர் பட்டம் பெற்றவர்கள் - 7 பேர்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மிகவும் இளம் வயது வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி ஆவார். இவர் அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், 15 தொகுதிகளில் நேரடியாக திமுக களம் காண்கிறது. இதில் 12 தொகுதிகளில் நேரடியாக அதிமுகவுடன் போட்டியிடுகிறது. மேலும் பாமக, பாஜக மற்றும் அமமுக உடன் தலா 1 தொகுதியில் திமுக மோதுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
1971 முதல் 2021 வரையிலான சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக 12 முறை போட்டியிட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன். இதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 13 தடவை தொடர்ச்சியாக போட்டியிட்ட வேட்பாளர் என்ற கருணாநிதியின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். இருப்பினும் கருணாநிதி போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ-க்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இம்முறை புதுமுகங்கள் பலருக்கும் திமுக வாய்ப்பு கொடுத்துள்ளது. இதன்மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய திட்டத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.