

தமிழ்நாட்டில் தற்போது ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணியின் வழக்கு தான் மர்மங்கள் நிறைந்த வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதாக கூறி, எண்ணற்ற சிறுமிளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஜெம் கிரானைட் வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது எனவும், கடந்த ஆட்சியில் இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பணம் கைமாறி இருப்பதாகவும் தவெக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய் உள்பட 2 அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று காலை சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் மனுவை அளித்திருக்கிறார். இந்தப் புகார் மனுவில், “முதல்வர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும். ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு தொடர்பாக அரசு சார்பில் ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும். அப்படி ஏதேனும் ரகசிய ஆதாரங்கள் இருந்தால், அதனை சிறப்பு புலனாய்வுக் குழு பெற வேண்டும்” என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கித் தர வேண்டியது அரசின் கடமை என முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது சூடுபிடித்திருக்கும் நிலையில், திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை இன்று மதுரையில் தொடக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.
இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இருவரை விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பது தவெக-வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், திமுக எம்எல்ஏ எ.வ.வேலு மீது நேற்று (செப்டம்பர் 27) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இன்று (செப்டம்பர் 28) தவெக அரசுக்கு எதிராக திமுக புகார் மனு அளித்துள்ளது. அடுத்த வாரம் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூலில், திமுகவின் இந்த புகார் மனு கவனம் பெற்றுள்ளது.