

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ. 100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை நாளை (நவம்பர் 5) முதல் நவம்பர் 7 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 100-க்கு 10 வகையான காய்கறித் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 8-ம்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் கூடுதல் செலவின்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நோக்கில், அத்தியாவசிய சமையல் காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ. 100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புப் பைகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த திட்டம் சென்னையில் உள்ள
‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ என்ற பெயரில், தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் இயக்கப்பட உள்ள 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம், நாளை (நவம்பர் 5) முதல் நவம்பர் 7 வரை மூன்று நாட்களுக்கு இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது.
குறிப்பாக தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, சந்தையில் நிலவும் விலை உயர்விலிருந்து ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதற்காக இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒரு தொகுப்பில் மொத்தம் 2.5 கிலோவிற்கும் அதிகமான எடையில், பத்து வகையான காய்கறிகள் வழங்கப்படுகின்றன.
முக்கியத் தகவல்கள்:
விற்பனை நாட்கள்: இன்று முதல் (நவம்பர் 5) முதல் நவம்பர் 7 வரை 3 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறும்.
எங்கெல்லாம் கிடைக்கும்?: தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் (கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பண்ணை பசுமை நுகர்வோர் நிலையங்கள், TUCS கிளைகள்) மூலம் இது விற்பனை செய்யப்படுகிறது.
சென்னைக்கான கூடுதல் வசதி: சென்னை மாநகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் (Mobile Vans) மூலமும் இந்தத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
விலை மற்றும் அளவு: ஒரு தொகுப்பின் விலை ரூ.100. இதில் தேங்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் (சுமார் 2.5 - 2.6 கிலோ எடை) முழுத் தொகுப்பாக மட்டுமே கிடைக்கும். தனித்தனியாகப் பிரித்து வாங்க முடியாது.
கட்டுப்பாடுகள்: ஒரு நுகர்வோருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு (Pack) மட்டுமே வழங்கப்படும்.
யாரெல்லாம் வாங்கலாம்?: இதற்கு ரேஷன் கார்டு அல்லது பிரத்யேக டோக்கன் கட்டாயமில்லை, பொதுமக்கள் அனைவரும் நேரடியாகப் பணம் செலுத்தி இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
காய்கறிகள் பட்டியல்: உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட 10 வகை காய்கறிகள் இதில் அடங்கும்.
தொகுப்பில் உள்ள காய்கறிகள் மற்றும் அளவுகள்:
பெரிய வெங்காயம் - 500 கிராம்
தக்காளி - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
கத்தரிக்காய் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 100 கிராம்
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
இஞ்சி - 50 கிராம்
எலுமிச்சை - 100 கிராம்
தேங்காய் - 1 (400 - 450 கிராம் எடை கொண்டது)
இதில் உள்ள எந்தவொரு காய்கறிகளின் அளவையும் குறைக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்றும், குறிப்பிடப்பட்டுள்ள துல்லியமான நிகர எடையில் புதிய மற்றும் தரமான காய்கறிகளை மட்டுமே பொட்டலமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் இக்காய்கறிகள், 15-க்கு 12 அங்குல அளவு கொண்ட பிரத்யேக மறுசுழற்சி சூழல்சார் பைகளில் அடைக்கப்பட்டு, அதன் மீது விவர முத்திரையுடன் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
மேலும், விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, கடை ஊழியர்களுக்கு ஒரு தொகுப்பிற்கு 1 ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நடைபெறும் மூன்று நாட்களும் தினமும் காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்த விற்பனையில் நுகர்வோரின் பெயர், முகவரி, மொபைல் நம்பர் ஆகியவை பதியப்பட்டு முறையான ரசீது வழங்கப்படும். பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், கடையின் முன்புறம் தகவல் பலகை வைக்கப்படுவதோடு, சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களை அணுகி இருப்பு விவரங்களைச் சரிபார்த்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.