ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்: இனி விமானத்தில் இருமுடிக்கு அனுமதி.!

Irumudi Allowed in Flight
Sabarimalai Iyappan Temple
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்குச் செல்கின்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு வசதிகளை செய்து தரும் நிலையில், தற்போது விமானங்களில் எவ்வித சோதனையும் இன்றி ஐயப்ப பக்தர்கள் இருமுடியை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்திற்கு செல்வதற்கு பேருந்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையத்திற்குள் ஐயப்ப பக்தர்கள் நுழையும்போது, இருமுடியை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் புனிதமான இருமுடியை அவிழ்த்து பிறகு திரும்பவும் இறுக்கமாக கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

சோதனைகள் இன்றி இருமுடியை அனுமதிக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர. இந்நிலையில், வழக்கமான சோதனைகள் ஏதுமின்றி விமானத்திற்குள் எடுத்துச் செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருமுடியை அனுமதிப்பது குறித்து மத்திய விமானத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில், “ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, வருகின்ற நவம்பர் 28 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விமானங்களில் இருமுடிகளை மடடும் சோதனையின்றி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாவலர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டியது அவசியம்.

ஐயப்ப பக்தர்களின் ஆழமான பக்தி உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நெறிமுறைகள் எப்போதும் போலவே பின்பற்றப்படும். நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தின் நம்பிக்கை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக விமானங்களில் 100 மில்லி லிட்டருக்கும் குறைவான திரவப் பொருட்களை மட்டுமே கையில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். ஆனால் ஐயப்ப பக்தர்கள் எடுத்து செல்லும் இருமுடியில் இருக்கும் நெய்யின் அளவு 100 மில்லி லிட்டருக்கும் அதிகம் என்பதால், இது லக்கேஜ் பிரிவில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இருமுடிகளை சோதனையின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!
Irumudi Allowed in Flight

எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக பம்பையை அடைய, தினசரி 500 பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்படாத காட்டுப் பாதைகள் வழியாக பக்தர்கள் யாரும் செல்லக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வருகின்ற டிசமபர் 2 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தில் பாயாசத்துடன் விருந்து வைக்கப்பட உள்ளது. தினசரி அன்னதானம் மதியம் 12 மணிமுதல் 3 மணி வரை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு..!
Irumudi Allowed in Flight