

இந்தியாவில் மாதச் சம்பளக்காரர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎஃப் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஊழியர்களின் வருங்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் பிஎஃப் தொகையை எடுப்பது முதல் பென்ஷன் தொகையை பெறுவது வரை அனைத்து சேவைகளையும் எளிமையாக்க பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவ்வகையில் பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவை 10 சதவீதமாக குறைத்துள்ளது வருங்கால வைப்பு நிதி நிறுவனம். இதன்மூலம் எண்ணற்ற பணியாளர்கள் திருமணம் மற்றும் மருத்துவ அவசரம் உள்ளிட்ட தேவைகளுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது அதிக பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஎஃப் விதிமுறைகளில் கோரப்பட்ட மாற்றங்களுக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 3 முக்கிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதால், பிஎஃப் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1. குறைந்தபட்ச இருப்புத்தொகை:
பொதுவாக ஒரு பிஎஃப் வாடிக்கையாளர், அவருடைய கணக்கில் குறைந்தபட்சம் 25% பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். அவசர காலங்ளில் 75% பிஎஃப் பணம் வரை மட்டுமே எடுக்க முடியும். ஆனால் இந்த விதியில் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது EPFO.
இதன்படி பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்ளுடைய கணக்கில் 90% வரை பணத்தை எடுத்துக் கொள்லாம். குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 10%-ஐ மட்டும் பராமரித்தால் போதுமானது.
2. முழுப் பணத்தை எடுக்கும் கால இடைவெளி குறைப்பு:
வேலையிழப்பு அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்றால், 12 மாதத்திற்குப் பிறகே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால் இந்த விதியிலும் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இனி வேலையை விடும் பணியாளர்கள் கணக்கில் உள்ள முழுப் பணத்தையும் 2 மாதங்களுககுப் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கால இடைவெளி குறைக்கப்பட்டிருப்பது, வேலையை இழந்த பிறகு நிதி நெருக்கடியில் தவிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
3. தவணை முறைத் திட்டம்:
பிஎஃப் பணத்தை மாதந்தோறும் எடுத்துக் கொள்ளும் தவணை முறைத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
பிஎஃப் பணம் தவணை முறையில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், மாதாந்திர செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும். தவணை முறையில் ஒவ்வொரு மாதமும் பணம் வரவு வைக்கப்படும் போது, பிஎஃப் கணக்கில் மீதமுள்ள பணத்திற்கு வட்டி வந்து கொண்டே இருக்கும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு புதிய பென்ஷன் திட்டம் போல செயல்படும் என்பதால், பெரும்பாலான ஊழியர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.
பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்க்க கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 3 முக்கிய விதிகளுக்கு EPFO நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. வெகு விரைவில் இந்த விதிகள் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது