

தவெக-வை சேர்ந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு இன்று (நவம்பர் 19) நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 72 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு முதல்வர் விஜய் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாபுவின் மறைவைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் நாளைய திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதால், தவெக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
யார் இந்த வி.எஸ்.பாபு?
* ஒரு காலத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு, கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார்.
* 2011 இல் தொகுதி மறுசீரமைப்பின் போது புரசைவாக்கம் மற்றும் வில்லிவாக்கம் ஆகியவை இணைக்கப்பட்டு கொளத்தூர் தொகுதிய உருவானது.
* 2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால், வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்கு வி.எஸ்.பாபு முக்கிய காரணமாக இருந்தார்.
* அதன்பிறகு திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதே ஆண்டில் அதிமுகவில் இணைந்தார் பாபு.
* 2016 ஆம் ஆண்டு அதிமுகவில் வி.எஸ்.பாபுவுக்கு வடசென்னை வடக்கு - மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
* 2017 இல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், பாபுவை கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக.
* 2022 ஆம் ஆண்டில் இபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் வி.எஸ்.பாபு.
* 2025 இல் வடசென்னை வடக்கு - மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து பாபுவை அதிமுக நீக்கியதால், அதிருப்தி அடைந்தார் பாபு.
* 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் முதல்வர் விஜய் தலைமையில் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
* கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட வி.எஸ்.பாபுவை இன்முகத்தோடு அரணைத்துக் கொண்டது தவெக.
* 2011 இல் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வி.எஸ்.பாபு தான், 2026 இல் தவெக சார்பில் போட்டியிட்டு முன்னாள் முதல்வரையே தோற்கடித்தார்.
* கொளத்தூர் தொகுதியில் 82,997 வாக்குகளைப் பெற்ற வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை வென்றார்.
தவெக சார்பில் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்ற வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இது பெரிய அளவில் பிரச்சினையாகாமல் தவெக தலைமை பார்த்துக் கொண்டது.
தவெகவின் பலம் குறைந்தது:
வி.எஸ்.பாபுவின் மறைவைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் தவெகவின் பலம் 109 இல் இருந்து 108 ஆக குறைந்துள்ளது. மேலும் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.