

பொதுமக்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது ரயில்வே துறை. பயணிகளின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்புது நடைமுறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது ரயில்வே. குறிப்பாக டிக்கெட் புக்கிங்கில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், ரயில் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு காத்திருப்பு அறை முதல் உணவகங்கள் வரை எண்ணற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் பேட்டரி வாகன சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் பேட்டரி வாகன சேவைகள் பல ரயில் நிலையங்களில் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ரயில் நிலையத்திற்கு உள்ளே மூத்த குடிமக்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளை ரயில் நிலைய நடைமேடைக்கு அழைத்துச் செல்ல பேட்டரி வாகன சேவை இயக்கப்படுகிறது. இந்த சேவையின் மூலம் நடப்பதற்கு சிரமப்படும் மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவர். இருப்பினும் இந்த பேட்டரி வாகன சேவை பல ரயில் நிலையங்களில் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் உள்ள 252 ரயில் நிலையங்களில் வெறும் 11-ல் மட்டுமே பேட்டரி வாகன சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் பேட்டரி வாகன சேவை குறைவாக இருப்பதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பேட்டரி வாகன சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற அணுகல் வழங்கப்படுவது அடிப்படை வசதிகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. பேட்டரி வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக ரயில்வே நடைமேடைகளில் சாய்வான தளங்கள் மற்றும் போதுமான இடவசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பல ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ இச்சேவை வழங்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தவும் ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல சிரமப்படும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரப்பிரசாதமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் முக்கிய ரயில் சந்திப்பு நிலையங்களில் மட்டுமே இருந்த பேட்டரி வாகன சேவை, இனி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் கிடைக்க உள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய A1 மற்றும் A தர ரயில் நிலையங்களில் மட்டுமே பேட்டரி வாகன சேவை இயக்கப்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்களில் பேட்டரி வாகன வசதி இல்லாத நிலையில், பயணிகள் நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விரைவில் இந்த நிலை மாறவுள்ளது. பேட்டரி வாகன சேவையால், இனி ரயில்வே நடைமேடையில் நடக்க வேண்டிய அவசியமே இருக்காது.