

தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதனைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக போதைப் பழக்கமே குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது அரசு. இருப்பினும் தமிழ்நாட்டில் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது மட்டும் ஒரே நாளில் 9 கொலைகள் நடந்துள்ளன. இதில் கொலையான நபர்களில் காவல் துறை அதிகாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையான காவல் துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. இருப்பினும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போதை மற்றும் மதுப் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம்.
தவெக அரசு பொறுப்பேற்ற உடன் பேருந்து நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (நவம்பர் 11) தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜோசப் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பண்டிகை காலத்தில் விடுமுறை அளிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உதவும் எனக் குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி பண்டிகை நாட்களில் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்க பண்டிகை நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பண்டிகை காலங்களில் மது விற்பனை குறைந்தால், குற்ற சம்பவங்களும் குறையும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில், இதுகுறித்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கத்தில், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு ஆலோசனை செய்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தினந்தோறும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு மேல் தான் திறக்கப்படுகின்றன. அதோடு ஆண்டுக்கு 8 நாட்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
1. திருவள்ளுவர் தினம்
2. இந்தியக் குடியரசு தினம்
3. வடலூர் ராமலிங்கனார் நினைவு தினம்
4. மகாவீர் ஜெயந்தி
5. மே 1 - தொழிலாளர் தினம்
6. இந்திய சுதந்திர தினம்
7. நபிகள் நாயகம் பிறந்த நாள்
8. காந்தி ஜெயந்தி
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடினாலும், சந்துக் கடைகள் மூலம் மது விற்பனை நடக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் தமிழக அரசு சந்துக் கடைகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சந்துக் கடைகளில் மது விற்பனை தாராளமாக நடப்பதோடு, அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.