ஆண்ட்ராய்டு டிவி வைத்திருப்பவர்களே உஷார்! கூகுள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை?

13 லட்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் XCPE மால்வேர் இருப்பதைக் கூகுள் கண்டுபிடித்துள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி|டிவி பாக்ஸ்
ஆண்ட்ராய்டு டிவி|டிவி பாக்ஸ்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

உங்கள் வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் ஆண்ட்ராய்டு டிவி அல்லது செட்-டாப் பாக்ஸ், வெறும் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் மட்டும் ஒளிபரப்பவில்லை; உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை உளவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உலக அளவில் சுமார் பதின்மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஆண்ட்ராய்டு சாதனங்களில் முக்கியமாக டிவி செட்-டாப் பாக்ஸ்களில், 'XCPE' என்ற அதிபயங்கர உளவு மால்வேர் புகுத்தப்பட்டிருப்பதை கூகுள் நிறுவனம் தற்போது கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை நிதி ஆதாயத்திற்காகவே செய்யப்பட்டது என்றும், இது ஒரு ஊழியரின் தவறு அல்லது மென்பொருள் உருவாக்கப் பிழையின் விளைவு அல்ல என்றும் கூகுள் தனது வலைப்பதிவில் வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ‘வீடியோஸ்ட்ராங்’ (Videostrong Technology) என்ற நிறுவனம், சாதனங்களைத் தயாரிக்கும்போதே தொழிற்சாலையிலேயே இந்த ரகசிய வைரஸை உள்ளே புகுத்தி விற்பனைக்கு அனுப்பியிருப்பது தொழில்நுட்ப உலகையே உலுக்கியுள்ளது.

‘எக்ஸ்.சி.பி.இ’ (XCPE) என்ற இந்த நச்சு மென்பொருள், நீங்கள் கடைகளில் புதிதாக வாங்கிய டிவியை வீட்டில் ஆன் செய்யும் முதல் நொடியிலிருந்தே தனது வேலையைத் தொடங்கிவிடும். இந்தச் சாதனங்களை வீட்டு வைஃபை (Wi-Fi) உடன் இணைத்தவுடன், ஹேக்கர்கள் உங்கள் இணைய இணைப்பைத் திருடி சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்துவது, விளம்பர மோசடிகள் செய்வது மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பயனர்களின் அனுமதி இல்லாமலேயே சாதனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்கும் இந்த மால்வேர் (Malware/Backdoor), ரகசியமாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது, டிவி திரையைப் படம் பிடிப்பது மற்றும் உங்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்களைத் திருடுவது போன்ற வேலைகளைச் சத்தமில்லாமல் செய்து வந்துள்ளது.

பெரும்பாலான பாதிப்புகள் ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ்களில் கண்டறியப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வீட்டு வைஃபை மற்றும் இன்டர்நெட் இணைப்பைச் சைபர் கிரிமினல்கள் தங்களின் சட்டவிரோத இணையப் பரிவர்த்தனைகளுக்கும், விளம்பர மோசடிகளுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்திப் பணம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சதியை முறியடிக்க ஜப்பான் தேசிய காவல்துறை மற்றும் சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த கூகுள், சைபர் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டு மையங்களைத் தகர்த்து, சுமார் ஒரு கோடி சாதனங்களுக்கான தொடர்பைத் துண்டித்துடன், விதிகளை மீறிச் செயல்பட்ட அந்தச் சீன நிறுவனத்திற்கு நிரந்தரத் தடை விதித்து, இனி அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு சாதனங்களைத் தயாரிக்க முடியாதபடி கூகுள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்தத் தாக்குதல் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சாதனங்களைப் பாதித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பிராண்டுகள் அல்லது மாடல்களை கூகிள் அடையாளம் காட்டவில்லை.

இதையும் படியுங்கள்:
உஷார்! இன்சூரன்ஸ் பெயரில் அரங்கேறும் புதுவித மோசடி: எச்சரிக்கை விடுத்த IRDAI...!
ஆண்ட்ராய்டு டிவி|டிவி பாக்ஸ்

நவம்பர் மாதம் வெளியான இந்த ஆய்வின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மால்வேர் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ்களில் (Android TV set-top boxes - குறிப்பாக MECOOL போன்ற பிராண்டுகளில்) கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர டெலிஹெல்த் உபகரணங்கள் (Telehealth devices), கரோக்கி இயந்திரங்கள் (Karaoke machines) மற்றும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகளிலும் (Digital signage) இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாதனங்கள் விற்பனைக்கு வருவதற்கு முன்பே, அவற்றின் அடிப்படை மென்பொருளில் (Firmware) இந்த மால்வேர் ரகசியமாக இணைக்கப்பட்டுள்ளது.

சாதனத்தை இயக்கியவுடன், பயனர்களின் அனுமதியின்றி செயலிகளை நிறுவுவது, திரையைப் பதிவு செய்வது மற்றும் தனிப்பட்ட தரவுகளைத் திருடுவது போன்ற செயல்களை இது செய்கிறது.

பாதிக்கப்பட்ட சாதனங்களை 'ரெசிடென்ஷியல் பிராக்ஸிகளாக' (Residential proxies) மாற்றி, சைபர் குற்றவாளிகள் தங்கள் சட்டவிரோத இணையச் செயல்பாடுகளுக்குப் பயனர்களின் வீட்டு இணைய இணைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்த Videostrong Technology நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் கூகுள் ரத்து செய்துள்ளது. இனி அந்நிறுவனம் கூகுள் அங்கீகாரம் பெற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களைத் தயாரிக்கவோ விற்கவோ முடியாது.

Google
Google

ஜப்பான் காவல்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து, இந்த மால்வேரைக் இயக்கிய சர்வர்கள் மற்றும் டொமைன்களை கூகுள் முடக்கியுள்ளது.

பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

* உங்களிடம் ஏற்கனவே பெயர் தெரியாத நிறுவனத்தின் டிவி பாக்ஸ் இருந்தால், அதில் முக்கியமான கூகுள் கணக்குகளையோ (Gmail) வங்கி விவரங்களையோ பயன்படுத்த வேண்டாம்.

* இந்த மால்வேர் ஃபார்ம்வேர் (Firmware) அளவில் உள்ளதால், ஃபேக்டரி ரீசெட் (Factory reset) செய்தாலும் இது நீங்காது. எனவே, பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விலை குறைந்த, அங்கீகரிக்கப்படாத ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்களை இணையத்திலிருந்து துண்டித்துவிட்டு புதிய சாதனத்தை மாற்றுவதே பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் மோசடி நடந்த 1 மணி நேரத்தில்... இந்த 3 விஷயங்களை செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும்!
ஆண்ட்ராய்டு டிவி|டிவி பாக்ஸ்

* புதிய ஆண்ட்ராய்டு சாதனங்களை வாங்கும்போது, கூகுள் சான்றிதழ் (Google Certified) பெற்ற நம்பகமான நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும்.

* விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகப் பெயர் தெரியாத உள்ளூர் அல்லது சீன தயாரிப்பு டிவி பாக்ஸ்களை (உதாரணமாக T95, MXQ Pro போன்றவை) வாங்குவதைத் தவிர்க்கவும். மாறாக, Xiaomi (Mi Box), Realme, Amazon Fire TV Stick, Google Chromecast, Apple TV போன்ற நம்பகமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கவும்.

* உங்கள் டிவி பாக்ஸில் உள்ள Google Play Store செயலியில் 'Play Protect' வசதி ஆன் (On) செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நாம் இணையத்தில் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒரு சாதனத்தை வாங்குவதற்கு முன்பே அதனுள் வைரஸ் புகுத்தப்பட்டு வருவது சாமானிய மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு 8000 ரூபாய் போனஸ் என மோசடி... வாட்ஸ்அப்பில் பரவும் லிங்கை தொட்டால் அவ்வளவுதான்..!
ஆண்ட்ராய்டு டிவி|டிவி பாக்ஸ்

எனவே, விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகப் பெயர் தெரியாத நிறுவனங்களின் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, நம்பகமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துமாறு கூகுள் நிறுவனம் பொதுமக்களுக்குத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.