

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பலமடங்கு அபரிமிதமாக உள்ளது. பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது ஏஐ தொழில்நுட்பம். மொபைல்போன்களிலும் ஏஐ வசதி இருப்பதால், பொதுமக்களும் அவ்வப்போது இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் அடுத்த பதிப்பான தனது ஜெமினி-3 ஏஐ தொழில்நுட்பத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய பதிப்பை தனது வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது கூகுள் நிறுவனம். ஜெமினி-3 ஏஐ ஆனது கூகுள் தேடுபொறி, ஏஐ ஸ்டுடியோ மற்றும் ஜெமினி செயலியில் உடனடியாகக் கிடைக்கும். ஜெமினி-2 ஏஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சுமார் 11 மாதங்கள் கழித்து 3வது பதிப்பை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.
உலகில் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ உருவாக்கத்தில் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பப் போட்டியில் தங்களை முன்னிலையில் வைத்திருக்க ஜெமினி-3 ஏஐ உதவும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுளின் ஜெமினி-3 ஏஐ தொழில்நுட்பத்தை ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெமினி-3 ஏஐ குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், “இதுவரை உருவாக்கியதிலேயே ஜெமினி-3 தான் எங்களின் அறிவார்ந்த ஏஐ மாடல். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏஐ உலகில் கால்தடம் பதித்த ஜெமினி நிறுவனம், தற்போது 650 மில்லியனுக்கும் மேலான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைத் தன்வசம் கொண்டுள்ளது.
இதுதவிர 13 மில்லியன் டெவலப்பர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குகிறார்கள். இதற்கு முந்தைய ஏஐ மாடல்கள் பயன்பாட்டிற்கு வந்த ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகே கூகுளில் அதிகம் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஜெமினி-3 ஏஐ மாடல் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே அனைத்து தயாரிப்புகளிலும் கிடைக்கும்படி கொண்டு வரப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் பிரீமியம் ஏஐ சந்தா திட்டத்தின் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், ஜெமினி-3 ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும், மிகவும் சிக்கலான பகுத்தறிவு திறன்களுடன் ஜெமினி-3 பயன்பாடு கிடைக்கும். ஜெமினி ப்ரோ மற்றும் ஜெமினி அல்ட்ரா பயனர்கள் அதிக வரம்புகளுடன் ஜெமினி-3 ஏஐ மாடலை பயன்படுத்த முடியும்.
கூகுள் ஜெமினி-3 ஏஐ இலவசம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கூகுள் ஏஐ உடன் ஏஐ பார்ட்னர்ஷிப்பைக் கொண்டுளளது. இந்நிலையில் தற்போது மிகப்பெரிய அறிவிபபை வெளியிட்டுள்ளது ஜியோ. இதன்படி ஜியோ 5G அன்லிமிடெட் வாடிக்கையாளர்கள் அனைவரும், ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்தை எவ்வித செலவும் இல்லாமல் 18 மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.
இதற்கு நீங்கள் மைஜியோ (MyJio) செயலிக்குள் உள்நுழைந்து, Claim Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடய கூகுள் கணக்கில் உள்நுழைநதால், உடனடியாக ஜெமினி-3 ஏஐ பயன்பாடு கிடைத்து விடும்.