உலகளவில் தொலைபேசிப் பயனர்களை இலக்கு வைக்கும் புதிய 'சைலண்ட் கால்' (Silent Call) மோசடி குறித்து சைபர் நிபுணர்கள் தீவிரமாக எச்சரித்து வருகின்றனர். யாரும் பேசாத மர்மமான தொலைபேசி அழைப்புகள், செயலிலுள்ள எண்களை உறுதிப்படுத்தவும், மோசடிகளுக்கான குரல் மாதிரிகளைப் பெறவும், அமைதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் அதிநவீன மோசடியின் முதல் படி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த ஆண்டில், இதுபோன்ற ஒருதலைப்பட்ச அழைப்புகள் பற்றிய புகார்கள் உலகளவில் ஏராளமாக அதிகரித்துள்ளன.
அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, நாம் பதிலளிப்போம்; ஆனால் எதிர்முனையில் அமைதி மட்டுமே நிலவும். சில வினாடிகள் கழித்து நாம் "ஹலோ?" என்றோ அல்லது ஏதேனும் ஒரு வார்த்தையையோ சொன்னவுடன், இணைப்பு துண்டிக்கப்படும். பெரும்பாலானோர் இதை ஒரு தவறான அழைப்பு என்று அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், சைபர் கிரைம் புலனாய்வாளர்கள் இதை ஒரு 'அமைதியான மோசடி அழைப்பு' என்று அடையாளம் காண்கின்றனர். இது குறைந்த தொழில்நுட்பம் என்றாலும், சமூகப் பொறியியல் (Social Engineering) தந்திரத்தைக் கொண்ட பயனுள்ள கொள்ளை முயற்சியாகும்.
இந்த அமைதி அழைப்புகள், பெரும்பாலும் ஓர் எண் செயலில் உள்ளதா என்பதை சோதிக்க வடிவமைக்கப்பட்ட தானியங்கி டயலர்களால் (Automated Dialers) மேற்கொள்ளப்படுகின்றன. நாம் அழைப்பைப் பெறும்போது, சிஸ்டம் அந்த லைனை 'நேரடி' எண் என்று குறியிடுகிறது. பதிலளிப்பவர் 'ஹலோ' அல்லது 'ஆம்' போன்ற எளிய வார்த்தைகளைப் பேசினால், அந்தச் சுருக்கமான ஆடியோ பதிவு செய்யப்பட்டு, பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இது ஒரு வகையான உளவு பார்த்தல் ஆகும்.
மோசடி செய்பவர்கள் இந்தச் செயல்பாட்டை உறுதிப்படுத்தியவுடன், குரல் குளோனிங்கிற்கு (Voice Cloning) AI அமைப்புகளைப் பயிற்றுவிக்கக்கூடிய குரல் மாதிரிகளைச் சேகரிக்கின்றனர். பின்னர், இந்தச் சரிபார்க்கப்பட்ட 'நேரடி' எண்களை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் கிரைம் கும்பல்கள் வரை பயன்படுத்தக்கூடிய சட்டவிரோத தொடர்பு தரவுத்தளங்களில் அதிக விலைக்கு விற்கிறார்கள். இந்தத் தரவுகள் குரல்-ஃபிஷிங் (விஷிங்), எஸ்எம்எஸ் மோசடிகள் அல்லது AI-இயக்கப்படும் ஆள்மாறாட்ட மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே, எதிர்முனையின் மௌனத்தின் பின்னே ஓர் ஆபத்து உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். உரையாடல் இல்லாமல் வரும் அமைதியான அழைப்பு, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பைக் குறைக்க வழிவகுக்கிறது. அச்சுறுத்தல்கள் அல்லது வற்புறுத்தல் இல்லாத இந்தச் சூழல், ஏமாற்றுபவர்களுக்குச் சாதகமாக அமைகிறது. பதில் கூறாமல் அமைதியாக இருப்பதே சிறந்த தற்காப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு அழைப்பைப் பெற்ற பிறகு எதுவும் கேட்கவில்லை என்றால், உடனடியாகத் தொலைபேசியைத் துண்டிப்பதே சைபர் மோசடிகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் எடுக்கும் சிறந்த முயற்சியாகும்.
(AI) குரல் க்ளோனிங் மூலம் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
ஹைதராபாத்தில் வசிக்கும் 72 வயதான பாட்டி ஒருவருக்கு, நியூஜெர்சியில் உள்ள அவரது நாத்தனார் போல வாட்ஸ்அப்பில் புதிய எண்ணிலிருந்து பணம் கேட்டு செய்தி வந்தது. பாட்டிக்கு சந்தேகம் வர, அந்த எண்ணுக்குப் போன் செய்து பார்த்திருக்கிறார். நாத்தனாரின் குரலைக் கேட்ட பாட்டி, நம்பி ₹1.97 லட்சம் பணத்தை அனுப்பிய அடுத்த விநாடியே, அந்த எண் பாட்டியைத் பிளாக் செய்துவிட்டது. பின்னர், மற்றொரு உறவினர் மூலம் விசாரித்த போதுதான், பணம் கேட்டது நாத்தனார் இல்லை என்றும், தான் ஏமாற்றப்பட்டதாகவும் பாட்டி உணர்ந்தார். உடனடியாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
குரல் குளோனிங் மோசடி விளக்கம்:
இந்த மோசடி குறித்து போலீஸ் விளக்கியதாவது: முதலில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, நீங்கள் எடுத்து 'ஹலோ' என்று பேசினால், உங்கள் குரல் பதிவு செய்யப்படும். அந்தப் பதிவை வைத்து AI தொழில்நுட்பத்தில் குரல் குளோனிங் (Voice Cloning) மூலம் உங்கள் குரல் உருவாக்கப்படுகிறது. இந்தக் குரலைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் உங்கள் உறவினர்களை நீங்கள் பேசுவது போலவே நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள். நிஜமான குரலுக்கும் AI-உருவாக்கும் குரலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இத்தகைய AI குரல் மோசடிகள் இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வருவதாகவும், இதில் ஆளானவர்களில் 83 சதவிகிதத்தினர் பண இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், இவர்களில் 48 சதவிகிதத்தினர் ₹50,000-க்கும் அதிகமாக இழந்துள்ளனர்.