

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரைத் தினசரி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..
இணையத்தில் பல கோடிக் கணக்கான வெப்சைட்டுகள் (Website) இயங்கி வருகிறது. இதில், நமக்கு தேவையான வெப்சைட்டை தேடி கண்டுபிடிக்க உதவும் ஒரு பிரவுசர் தான் கூகுள் குரோம் (Google Chrome). கடந்த 2008-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசரை, உலக அளவில் 4 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய கணினிகளிலும், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் போன்ற ஸ்மார்ட் போன்களிலும், இது செயல்பட்டு வருகிறது. இவ்வாறு உலக அளவில், பாதிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் ஒரு பிரவுசரில், மிகப்பெரிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவான ‘சி.இ.ஆர்.டி-இன்’ (CERT-In), கூகுள் குரோம் பயனர்களுக்கு அதிதீவிர (Critical) பாதுகாப்பு எச்சரிக்கையை (CIVN-2026-0544) ஒன்றை விடுத்துள்ளது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கணினியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவும், தனிப்பட்ட தரவுகளைத் திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
குரோம் பிரவுசரில் கண்டறியப்பட்டுள்ள மிக ஆபத்தான பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தி, சைபர் கொள்ளையர்கள் இப்போதே பயனர்களின் சாதனங்களை ஹேக் செய்யும் வேலையைத் தொடங்கிவிட்டதால், உடனடியாக பிரவுசரை அப்டேட் செய்யும்படி மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
முக்கிய பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள் :
குறிப்பாக, விண்டோஸ் (Windows), மேக் (Mac) மற்றும் லினக்ஸ் (Linux) ஆகியவற்றில் 157.0.8103.50 என்ற பதிப்பிற்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த நேரடி ஆபத்து காத்திருக்கிறது.
கூகுள் குரோம் எக்ஸ்டெண்டட் ஸ்டேபிள் (Extended Stable) பயனர்களில் 156.0.8078.96 பதிப்புக்கு முந்தைய பதிப்புகளும் ஆபத்தில் உள்ளன.
பிரவுசரின் முக்கிய இயந்திரமான வி8 ஜாவாஸ்கிரிப்ட், கிராபிக்ஸ் மற்றும் ஃபைல் சிஸ்டம் ஆகிய பகுதிகளில் பல தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் கண்டறியப்பட்டுள்ள CVE-2026-125350 என்ற குறைபாடு ஏற்கனவே இணையத்தில் ஹேக்கர்களால் தீவிரமாகப் பயன்படுத்தப்படுவதாக (actively exploited in the wild) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ‘சிவிஇ-2026-125350’ (CVE-2026-125350) என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு ஓட்டையை, ஹேக்கர்கள் இந்த நொடியில் கூட உலகம் முழுவதும் தீவிரமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சைபர் தாக்குதல் நடப்பது நாம் எதிர்பார்க்காத மிக எளிமையான வழியில்தான். சைபர் கிரிமினல்கள் தாங்கள் பிரத்யேகமாக வடிவமைத்த போலி இணையதளப் பக்கத்திற்குள் பயனர்களைத் தந்திரமாக வரவழைப்பார்கள்.
அதாவது ஹேக்கர்கள் பிரத்யேகமாக வடிவமைத்த போலி இணையதளங்களைப் பயனர்கள் திறக்கும்போது, இந்தக் குறைபாடுகள் வழியாகத் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களை (Malicious Code) கணினியில் செலுத்த முடியும்.
நீங்கள் தெரியாமல் அந்த இணையதள லிங்கைத் தொட்டு உள்ளே சென்ற அடுத்த நொடியே, உங்களின் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு நச்சுக் குறியீடுகளை உங்களின் சாதனத்திற்குள் புகுத்திவிடுவார்கள்.
இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டை எடுப்பது, சேமித்து வைத்துள்ள பாஸ்வேர்டுகள் மற்றும் வங்கி விவரங்களைத் திருடுவது அல்லது சிஸ்டத்தை முற்றிலுமாக முடக்குவது போன்ற செயல்களை ஹேக்கர்களால் சத்தமில்லாமல் செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி, கூகுள் க்ரோமில் உள்ள மல்டி பிராசஸ் பாதுகாப்பு அமைப்பை மீறி, தேவையற்ற சாப்ட்வேர் ஸ்கிரிப்ட்களை இயக்குவது போன்ற செயல்களில் ஹேக்கர்கள் ஈடுபடலாம் என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு எச்சரிக்கைகளை தெரிவித்துள்ள இந்திய அரசின் அந்த அமைப்பு, அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றும், அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பயனர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியவை :
இந்தப் பேராபத்தில் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் பிரவுசரை உடனடியாகப் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யுமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது. இதற்கு உங்கள் கணினியில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து, வலதுபுற மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் (Menu) ஐகானை கிளிக் செய்யவும்.
அதில் ‘ஹெல்ப்’ (Help) என்ற பகுதிக்குச் சென்று, ‘அபௌட் கூகுள் குரோம்’ (About Google Chrome) என்பதை கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்திற்குச் சென்றவுடன், குரோம் தானாகவே புதிய அப்டேட்டுகள் உள்ளதா எனச் சோதித்து, புதிய பதிப்பை டவுன்லோட் செய்யத் தொடங்கிவிடும். பதிவிறக்கம் முடிந்ததும் பிரவுசரை ஒருமுறை ‘ரீ-லான்ச்’ (Relaunch) செய்தால் பாதுகாப்பான புதிய பதிப்பிற்கு கூகுள் பிரவுசர் மாற்றப்பட்டுவிடும். பயனர்களின் சமூக வலைதள பாஸ்வேர்டுகள், வங்கி கணக்குகள் போன்றவற்றை ஹேக் செய்வதை, இதன்மூலம் தடுக்க முடியும். மேலும், தேவையற்ற தீங்கிழைக்கும் Malware-கள் உங்கள் சாதனத்திற்குள் நுழைவதும் தடுக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, உடனடியாக இந்த அப்டேட்டைச் செய்வதோடு, அப்டேட் செய்யும் வரை, அறிமுகமில்லாத சந்தேகத்திற்கிடமானவர்களிம் இருந்து வரும் லிங்குகளைத் தொட வேண்டாம் என்றும் மத்திய அரசு தீவிரமாக அறிவுறுத்தியுள்ளது.