

போலி அடையாளங்களை தடுக்கவும், மொபைல் இணைப்புகளில் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி அச்சுறுத்தலை சமாளிக்கவும், புதிய சிம் கார்டுகளை வழங்குவற்கான விதிகளை (சிம் விதிமுறைகள்) மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.
அதன்படி, இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற விதியை வரும் ஆகஸ்ட் 24 முதல் கட்டாயமாக செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு வழங்குவதற்கு முன்பு வாடிக்கையாளரின் அடையாளத்தை நிகழ் நேரத்தில் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் விவரங்கள் அரசாங்கத்தின் டிஜிட்டல் புலனாய்வுத்தளம் மூலம் சரிபார்க்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்கலாம். அதேசமயம் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த வரம்பு 6 ஆக உள்ளது. இதை தாண்டி சிம் கார்டுகள் வாங்க வேண்டுமென்றால் அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
ஏற்கனவே தங்கள் பெயரில் 9 சிம் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் புதிய சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் புதிய சிம் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் ஏற்கனவே இயங்கி வரும் அனைத்து மொபைல் எண்களின் விவரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தற்போதைய இணைப்புகளை சரிபார்த்த பின்னரே புதிய சிம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பை எட்டிய (9 சிம் கார்டுகள்) சந்தாதாரர்களின் பிரதிநிதித்துவ படம், வருகிற வருகிற 23-ம்தேதி முதல் டிஜிட்டல் புலனாய்வு தளங்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த புகைப்படங்களை 24-ம்தேதி முதல் தினம்தோறும் பதிவிறக்கம் செய்து, அனுமதிக்கப்பட்ட வரம்பை விட கூடுதல் சிம் கார்டுகளை பெற முயற்சிப்பவர்களை கண்டறிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வரம்பு பத்தாண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது என்றாலும், தற்போது இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் போலி சிம்கள் மற்றும் டிஜிட்டல் நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் இதை தீவிரமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய அரசின் 'சஞ்சார் சாதி' இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களை எளிதாகக் கண்டறியலாம்.
Sanchar Saathi TAFCOP Portal இணையதளத்திற்கு சென்று, ‘Know mobile connections in your name’ என்பதை தேர்வு செய்து உங்கள் மொபைல் எண் மற்றும் திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டை பதிவு செய்யவும். உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு 'Validate' செய்யவும்.
இதன்பின் உங்கள் அடையாள ஆவணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களின் பட்டியலும் திரையில் தோன்றும்.
இந்தப் பட்டியலில் உங்களுக்கு தெரியாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருந்தால், "This is not my number" அல்லது "Not Required" என்பதை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.