கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!!

நவம்பர் 30 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, வாராந்திர விடுமுறையான செவ்வாய்க்கிழமை திறந்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Guindy Children's Park
Guindy Children's Parkimage credit-mindtrip.ai
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பூங்கா 3 நாட்களுக்கு மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிண்டி சிறுவர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் (Guindy Children's Park) உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் நேற்று (27.11.2026) சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் பறவைகள் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பரிசோதனைக்காக மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD)அனுப்பப்பட உள்ளன.

பறவைக் காய்ச்சல் சந்தேகம் எழுந்துள்ள போதிலும், இதுவரை பறவைக் காய்ச்சல் தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனப் பூங்கா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா இன்று (நவம்பர் 28) முதல் 30-ம்தேதி வரை மூன்று நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

பறவைகள் உயிரிழந்த சம்பவம் கண்டறியப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் பூங்காவில் உள்ள பிற உயிரினங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பூங்காவில் நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பறவைகள் உயிரிழந்த குறிப்பிட்ட அடைப்பிடம் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பூங்காவில் நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

BIRD FLU|கிண்டி பூங்கா
BIRD FLU|கிண்டி பூங்காSource:TOI

மேலும், உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதோடு, பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை முன்னெச்சரிக்கையாக கால்நடை மருத்துவர்களால் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கிண்டி பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கிண்டி சிறுவர் பூங்காவில் (கிண்டி பூங்கா) H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 40 பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பூங்கா ஒரு வாரம் மூடப்பட்டிருந்தது.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் நீர்வாழ் பறவைகள் பிரிவில் 7 பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன.

இதையும் படியுங்கள்:
கிண்டி ரேஸ் கார்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Guindy Children's Park

இதில் H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் (அக்டோபர் 22 மற்றும் 23 ) பூங்கா மூடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற 6 நாட்களும் (புதன் முதல் திங்கள் வரை) செயல்படும். அதாவது, கிண்டி சிறுவர் பூங்காவிற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று முதல் நவம்பர் 30-ம்தேதி வரை பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வார விடுமுறை நாளான டிசம்பர் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பூங்கா திறந்திருக்குமா என்பது குறித்து நிர்வாகம் தெளிவுபடுத்தாததால் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : கிண்டி சிறுவர் பூங்காவில் 20 பறவைகள் திடீர் உயிரிழப்பு: பூங்கா மூடல்!
Guindy Children's Park

தற்போதைய சூழலில், வார இறுதி நாட்களில் கிண்டி பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த பொதுமக்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கவனத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.