

சிந்து நதிப் படுகையில் 5000 ஆண்டுகள் முன் செழித்த ஹரப்பா நாகரிகம், வன்முறை இல்லாத சமூகம், ஆண்–பெண் சமத்துவம், பெண் தெய்வ வழிபாடு, பசுபதி சிவன் யோக நிலையில் வணக்கம் போன்ற ஆன்மீக மரபுகள் மூலம் தனித்துவம் பெற்றது. கோட்டை, கீழ் நகரம் என திட்டமிட்ட நகர அமைப்பு, சுகாதார வசதிகள், வடிகால், குளியல் அறைகள், தானியக் களஞ்சியங்கள் ஆகியவை அவர்களின் மேம்பட்ட வாழ்வியலை வெளிப்படுத்துகின்றன.
உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில், மிகவும் உயர்ந்ததாக ஹரப்பா நாகரிகம் கருதப்படுகிறது. இது சிந்து நதிப் படுக்கையில் கி.மு. 2600-ஆம் ஆண்டு காலங்களில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. ஹரப்பா நாகரிகத்தின் அன்றாட வாழ்க்கை முறையை அறிந்து கொள்வது அவசியம். அவர்களின் நகர திட்டமிடல், சுகாதாரம், ஆன்மீகம் போன்றவற்றை அறிவதால் அவர்களின் மேன்மையை உணரலாம்.
1. மற்ற நாகரிகங்களை போல் இல்லாமல், ஹரப்பா நாகரிகத்தில் அடிமைகள், சிறைச்சாலைகள் போன்ற எதுவும் அங்கு கண்டறியப்படவில்லை.
2. ஹரப்பாவில் உள்ள சமூகம் வன்முறை இல்லாத நாகரீகமான சமூகமாக இருந்துள்ளது.
3. இந்த நாகரிகத்தில் வணிகர்கள், செல்வந்தர்கள், பூசாரிகள், தொழிலாளிகள் உள்ளிட்டோர் வாழ்ந்து வந்துள்ளனர்.
4. இங்கு ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப்பட்டனர். அவரவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமையும் வழங்கப்பட்டது.
ஹரப்பா மக்களின் ஆன்மீக வழிபாட்டு முறை இந்து மதத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது. தொல்பொருள் அகழ்வராய்ச்சியில் பெண் தெய்வங்களின் சிலைகள் கிடைத்துள்ளன. அதனால், அந்த கால சமூக மக்கள் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுத்து தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த நாகரிகத்தின் முக்கிய கடவுளாக பசுபதி எனப்படும் சிவபெருமான் இருக்கிறார். சிவபெருமானை சுற்றி விலங்கினங்கள், மற்ற உயிரினங்கள் சூழ, அவர் யோக நிலையில் அமர்ந்துள்ள உருவங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அந்த காலத்திலேயே யோகாசனமும் பரவலாக இருந்து உள்ளது என்பதை ஆன்மீக வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஹரப்பா நாகரிகத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் கோட்டை, கீழ் நகரம் என்று முக்கிய பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. கோட்டையில் அரச குடும்பத்தினர் வாழ்ந்து வாழ்ந்திருக்கலாம்.
நகரமானது வணிகர்கள், கைதொழில் செய்பவர்கள், விவசாயிகள், பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர்.
1. வீடுகள் சுடப்பட்ட செங்கற்களால் சாந்து பூசி கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்களும் காய்ந்த மண் கற்களாலும் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தெருக்கள் மற்றும் வீதிகளுக்கு தகுந்தவாறு போதுமான அளவு இடைவெளி கொடுக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது.
2. ஒவ்வொரு வீட்டிற்கும் தனியாக குளியல் அறை, கழிப்பறை போன்ற வசதிகளும், பொதுவாக மக்கள் கூடி குளிக்க பெரிய அளவில் படிக்கட்டுக்களுடன் குளங்களும் உருவாக்கப்பட்டு இருந்தன.
3. ஒவ்வொரு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால் வழியே ஊருக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டன.
4. இந்த வடிகால்களின் மேற்புறம் வார்ப்பிரும்பு அல்லது கல் தட்டுகளால் மூடப்பட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய தொட்டிகளுடன் கட்டப்பட்டிருந்தன.
5. பொது இடங்களில் குப்பைகளை சேகரிக்க தொட்டிகள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
6. பெரிய அளவில் தானியக் களஞ்சியங்கள், மக்கள் கூட மண்டபங்கள் மற்றும் பெரிய அளவிலான குடியிருப்புகள் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.
1. ஹரப்பா மக்கள் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்து வந்தனர்.
2. இவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம் போன்ற உலோகங்களை பயன்படுத்தி கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்கி வைத்திருந்தனர்.
3. மண்பாண்டங்கள், நகைகள் போன்ற பொருட்கள் வணிகர்களால் விற்பனை செய்யப்பட்டன.
4. அளவீடு செய்வதற்கு எடைகற்கள் மற்றும் அளவீட்டு முறைகள் அந்த காலத்திலேயே புழக்கத்தில் இருந்தது.
5. எகிப்து மற்றும் மெசபடோமியா போன்ற நாடுகளுடன் வாணிபமும் மேற்கொண்டுள்ளனர். லேபிஸ் லாசுலி என்ற விலை உயர்ந்த கற்கள் அப்போதையே வணிகத்தில் முக்கிய பங்கு வகித்தது.
ஹரப்பா நாகரிக மக்கள் தங்களின் போக்குவரத்திற்கு பெரும்பாலும் மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர். நதி பயணங்களுக்கு படகுகள் மற்றும் கப்பல்களை பயன்படுத்தினர். வர்த்தக போக்குவரத்திற்காக துறைமுகங்களையும் கிடங்குகளையும் அமைத்திருந்தனர்.
5000 ஆண்டுகள் பழமையான இந்த நாகரீகம், மக்களின் நேர்த்தியான வாழ்வியல் முறை, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றால் இன்றளவும் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக வரலாற்றின் மிகச்சிறந்த முன்னோடிகளான சிந்துவெளி மக்களின் மேம்பட்ட வாழ்வியலை அறிந்துகொள்வதன் மூலம், நமது பண்டைய நாகரிகத்தின் மீது பெருமிதம் கொள்வதோடு, நவீன நிர்வாகம் மற்றும் சுகாதார முறைகளின் அத்திவாரத்தை உங்களால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்.