இந்தியாவில் ஒருவர் தன் சொத்துக்களை வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுப்பது எளிதான விஷயம் அல்ல. பல்வேறு மதங்களுக்கு இடையே சொத்துக்களின் வாரிசுரிமைச் சட்டங்கள் வேறுபடுகின்றன. ஆணாதிக்க சமூகத்தில் சட்டங்கள் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் இந்தியாவில் பெண்களுக்கான சொத்து மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் பாரம்பரியமாக சுரண்டலாகவே இருந்து வருகின்றன.
பொதுவாக, ஒரு தந்தை, தான் சம்பாதித்த சொத்தை, உயில் எழுதாதபோதும், அவரது நேரடி வாரிசுகளுக்கு, அந்த சொத்தில் சமஉரிமை உள்ளது. அதேபோல், விதவை மனைவி (Remarriage situation) கணவன் இறந்தபின், அவரின் தந்தை வழியாகக் கிடைக்கும் பூர்வீக சொத்தில், விதவை மனைவி மறுமணம் செய்து விட்டால் அந்தச் சொத்தில் உரிமை இல்லை.
தற்போது, பலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். இருப்பினும், இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தைகளின் சொத்துரிமைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
வாரிசுரிமை சட்டத்தின்படி அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கு உள்ளது. எனவே, பெண்ணுக்கு விவாகரத்தாகி இருந்தாலும்சரி, முன்னாள் கணவர் மறுமணம் புரிந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் சரி, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது என்றெல்லாம் சட்ட விதிகள் கூறுகின்றன.
இந்நிலையில் விவாகரத்தாகி மறுமணம் செய்த முன்னாள் மருமகள் மீது மாமனார் தொடர்ந்த வித்தியாசமான வழக்கை தான் மதுரை உயர்நீதிமன்றம் சந்தித்துள்ளது. அதாவது, பரஸ்பர விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொண்ட மகனின் முன்னாள் மனைவி, அவர்களின் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் மாமனார்(மகனின் தந்தை), உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் மூலம் சுமூகமாக விவாகரத்து பெற்று கொண்டனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நபர்களை மறுமணமும் செய்து கொண்டனர். தந்தை வழி தாத்தா, பாட்டி (குழந்தையின் தந்தை) குடும்ப பராமரிப்பில் குழந்தை வளர்ந்து வருகிறார். குழந்தைக்கான மாதாந்திர பராமரிப்பு செலவு முழுவதையும் குழந்தையின் தந்தையே வழங்குகிறார். குழந்தையின் பெயரில் பணம் டெபாசிட்டும் செய்துள்ளார்... இன்சூரன்ஸும் செலுத்துகிறார்.
இந்நிலையில் குழந்தையின் பராமரிப்பு செலவை சமாளிக்க பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிடக்கோரி குழந்தையின் தாய்க்கு, தந்தை வழி தாத்தா குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம்,'தந்தைவழி தாத்தா மனு தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை. குழந்தையின் உண்மையான பாதுகாவலரான தந்தை உயிருடன் இருப்பதுடன், பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார் என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் விடாமல் இதை எதிர்த்து மீண்டும் குழந்தையின் சார்பில் அவரது தந்தை வழி தாத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தன்னுடைய உத்தரவில், ‘கணவன், மனைவி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று விட்டார்கள். சட்டப்பூர்வமாக புதிய பாதைகளை தேர்ந்தெடுத்த பெற்றோரை அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும். அதே நேரம் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட முறையில் குழந்தையின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தாயின் அமைதியான புது குடும்ப வாழ்க்கையை தொந்தரவு செய்யும் வகையில் தவறாக புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணம் தொடர்பாக முடிவுக்கு வந்த விவாகரத்தை மீண்டும் திறக்க பராமரிப்பு விதிகளை தவறாக பயன்படுத்துவதை இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது. எனவே, கீழமை நீதிமன்ற உத்தரவும் உறுதி செய்யப்படுகிறது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.