

நவீன காலகட்டத்தில் மருத்துவ காப்பீடு என்பது அவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுத்தவர்களின் சதவீதம் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவ காப்பீடு எடுத்தும் கூட சிலருக்கு கிளைம் நிராகரிக்கப்படுவது வேதனை தரும் நிகழ்வாகும். ஆகையால் மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு முன்பே நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கு 6 முக்கிய காரணங்கள் உள்ளன. இவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, விழிப்புடன் செயல்பட்டால், அவசர காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
1. முந்தைய நோய்களை மறைத்தல்:
பாலிசி எடுப்பதற்கு முன்பு, முந்தைய நோய்களை மறைக்கக் கூடாது. ஒருவேளை முந்தைய நோய்களை மறைத்தால், அதுவே உங்கள் கிளைம் நிராகரிப்புக்கு முக்கிய காரணாக அமைந்து விடும். மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் பழைய நோய் பாதிப்புகள் தெரிய வந்தால், ‘தகவல் மறைப்பு’ எனக் கூறி, உங்கள் கிளைமை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விடும்.
2. காத்திருப்பு காலம் முடிவடையாமல் இருப்பது:
பாலிசி எடுத்தவுடனேயே அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் காப்பீடு கிடைக்காது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் கிளைம் பெற விண்ணப்பத்தால், நிராகரிக்கப்படும். பாலிசி எடுத்த 30 நாட்களுக்குள் விபத்து சிகிச்சைக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும்.
சிறுநீரகக் கல், குடலிறக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட நோய்களுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருசில நோய்களுக்கு 4 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் உள்ளது.
3. பாலிசி வரம்புகள் மற்றும் விலக்குகள்:
எடை குறைப்பு மற்றும் அழகுசாதன சிகிச்சைகளுக்கு காப்பீடு கிடையாது. அறை வாடகைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அதிக கட்டணம் உள்ள அறைகளைத் தேர்ந்தெடுத்தால் பாலிசி தொகை போக மீதி செலவை நீங்கள் தான் ஏற்க வேண்டியிருக்கும்.
மருத்துவ சிகிச்சையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை (10% அல்லது 20%) நீங்கள் ஏற்க வேண்டும் என்ற விதி காப்பீட்டில் இருந்தால், அந்தத் தொகை க்ளைமில் கிடைக்காது. ஆகையால் காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
4. காலக்கெடுவிற்குள் தகவல் தெரிவிக்கத் தவறுதல்:
எதிர்பாராத அவசர சிகிச்சை என்றால் மருத்துவமனையில் சேர்ந்த 24 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட சிகிச்சை என்றால், சிகிச்சைக்கு 48 முதல் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு, மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தால், உங்கள் கிளைம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
5. பாலிசி காலாவதி மற்றும் புதுப்பிக்கத் தவறுதல்:
பாலிசி காலம் முடிந்த பிறகு, அதனை புதுப்பிக்காமல் மருத்துவமனையில் சேர்ந்தால் காப்பீட்டு பலன் கிடைக்காது. பாலிசியை தொடர்ந்து புதுப்பிக்கத் தவறி விட்டால், முந்தைய காலங்களில் கிடைக்க வேண்டிய ‘No Claim Bonus’ மற்றும் காத்திருப்ப காலச் சலுகையும் கிடைக்காமல் போய் விடும். ஆகையால் உரிய நேரத்தில் பாலிசியை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
6. முறையற்ற ஆவணங்கள்:
உடல் பரிசோதனை மற்றும் வாய்வழி மாததிரைக்காகவோ மருத்துவமனையில் தங்கியிருந்தால், காப்பீடு கிடைக்காது. தீவிர மருத்துவ சிகிச்சை இருந்தால் மட்டுமே காப்பீடு கிடைக்கும். டிஸ்சார்ஜ் சம்மரி, அசல் கட்டண ரசீதுகள், மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் உள்ளிட்ட விவரங்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது முரண்பாடுகள் இருந்தாலோ க்ளைம் நிராகரிக்கப்படலாம்.
நீதிமன்ற தீர்ப்பு:
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் உடல் பாதிப்புக்காக மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு வந்தார். இதற்கு அவர் மருத்துவக் காப்பீடு பெற விண்ணப்பித்த போது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி கிளைம் நிராகரிக்கப்பட்டது.
பாலிசிதாரர் நீதிமன்றத்தை நாடிய போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனையில் சேர்ந்தால் தான் காப்பீடு கொடுப்பீர்களா? தொடர்ந்து மருத்துவர் அறிவுரையின் படி மாத்திரை சாப்பிட்டு வருவதும் உடல்நல பாதிப்பு தான். குறைந்தபட்சம் 24 மணிநேர மருத்துவமனை சேர்க்கை கட்டாயம் என்ற விதியைப் பயன்படுத்தி, நியாயமான சிகிச்சை செலவுகளை மறுப்பது சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற நடைமுறை என நீதிமன்றம் கண்டித்தது.
ஆகையால் காப்பீட்டுத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, காப்பீட்டு நிறுவனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒருவேளை அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து உங்கள் கிளைம் நிராகரிக்கப்பட்டால், தயங்காமல் நீதிமன்றத்தை நாடுங்கள். உங்களுக்கான நியாயம் நிச்சயமாக கிடைக்கும்.