கூட்டுறவு vs தனியார் வங்கி: ​1 கிராமுக்கு அதிக பணம் எங்கே? விண்ணப்பிக்கும் முன் 7 செக் லிஸ்ட்!

கூட்டுறவு வங்கி நகைக் கடன் vs தனியார் வங்கி ஒப்பீடு மற்றும் நிராகரிப்பு காரணங்கள்.!
கூட்டுறவு vs தனியார் வங்கி
Gold loan
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைக்காக பலரும் கடன் வாங்குவது சாதாரணமாகி விட்டது. வங்கிகளில் பலவிதமான கடன்கள் வழங்கப்பட்டு வந்தாலும், நகை கடனுக்கு தான் வட்டி குறைவு. ஆகையால் தான் தனிநபர் கடன்களை காட்டிலும் நகைக் கடன்களை வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குகின்றனர். ஆனால் வங்கிகளை காட்டிலும் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் அதிகமான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். இல்லையெனில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அவ்வகையில் நகை கடன் பெறுவதில் தனியார் வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் மற்றும் கூட்டுறவு கடன் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

கூட்டுறவு வங்கி நகைக்கடன் vs தனியார் வங்கி நகைக்கடன்:

வட்டி விகிதம்:

நகை கடனை பொறுத்தவரை மிக சிறந்த தேர்வு கூட்டுறவு வங்கிகள் தான். ஏனெனில் நகை கடனுக்கு 9% முதல் 11% வரையிலான வட்டியே இங்கு வசூலிக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடனுக்கு அரசு மானியம் வழங்குவதோடு, 7% வட்டி தள்ளுபடியும் கிடைக்கும். ஆனால் தனியார் வங்கிகளில் 11% முதல் 18% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

செயல்முறை நேரம்:

கூட்டுறவு வங்கிளில் நகைக் கடன் பெறுவதற்கு 2 முதல் 5 மணி நேரம் வரை ஆகும். நகை மதிப்பீட்டாளரின் வருகை தாமதமானால், 1 நாள் கூட தேவைப்படும். தற்போது கூட்டுறவு வங்கிகளில் அரசு சார்பில் வாராந்திர சிறப்பு கடன் முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், செயல்முறை நேரம் குறைய வாய்ப்புள்ளது. வங்கிகளை பொறுத்தவரை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திற்குள் நகை கடனை பெற்று விடலாம்.

கடன் வரம்பு:

தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% - 85% வரை கடன் கிடைக்கும். சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வங்கிகளில் சந்தை மதிப்பில் 60% வரை தான் கடன் வழங்கப்படும். இதன்படி வங்கிகளில் 1 கிராமுக்கு 7,500 முதல் 8,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதற்கு முன்பு வங்கிகளில் 75% கடன் வரம்பு இருந்தது. ஆனால் நகைக் கடனில் வாராக்கடன் அதிகரித்ததால், கடன் வரம்பு குறைக்கப்பட்டது.

செயல்முறை கட்டணம்:

நகை கடனுக்கான செயல்முறை கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் வங்கிகளில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படுகிறது.

அடிப்படை தகுதி:

கூட்டுறவு வங்கி அல்லது தனியார் வங்கிகளில் நகை கடன் பெற குறைந்தபட்சம் வங்கி கணக்கு இருத்தல் வேண்டும். கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்த வரை கிராம எல்லைக்கு உட்பட்ட வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.

Gold loan waiver
Gold loan waiver
இதையும் படியுங்கள்:
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க போறீங்களா? உறுப்பினர் அட்டை முதல் தள்ளுபடி வரை முழு விவரம் இதோ.!
கூட்டுறவு vs தனியார் வங்கி

கூட்டுறவு வங்கி கடன் நிராகரிக்கப்படுவதற்கான 7 காரணங்கள்:

1. தங்க நகையின் தரம் குறைவாக இருப்பது:

கூட்டுறவு வங்கிகளில் 22 காரட் ஆபரண தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக் கடனில் முன்னுரிமை வழங்கப்படும். 18 காரட்டுக்கு குறைவான நகைகளை அடகு வைத்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

2. வங்கி அதிகார வரம்பு பொருந்தாமை:

கூட்டுறவு வங்கிகள் அந்தந்த வட்டம் அல்லது கிராம ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் வழங்கும். உங்களின் முகவரிச் சான்று வங்கி எல்லைக்குள் இல்லையெனில் கடன் கிடைக்காது.

3. உறுப்பினர் தகுதி இல்லாமை:

கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கு பெயரளவு உறுப்பினராக பதிவு செய்து, குறைந்தபட்ச பங்குத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம். போதுமான KYC ஆவணங்கள் இல்லையென்றாலும், உறுப்பினர் படிவம் சரியாக நிரப்பப்படவில்லை என்றாலும் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

4. நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் இல்லாமை:

அடமானம் வைக்கப்படும் நகையை அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டியது அவசியம். நகையில் நம்பகத்தன்மை இல்லாமை அல்லது உருக்கிய தங்கக் கட்டிகளை சமர்ப்பித்தால் கடன் நிராகரிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன் முகாம்: எந்த நாளில் என்ன கடன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
கூட்டுறவு vs தனியார் வங்கி

5. நிலுவைக் கடன் இருக்கக் கூடாது:

விவசாய நகைக் கடன் அல்லது மானிய வட்டி பிரிவில் கடனுக்கு விண்ணப்பித்தால், நில ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ நிலுவைக் கடன் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் புதிதாக விண்ணப்பிக்கப்படும் கடன் நிராகரிக்கப்படும்.

6. வாராக்கடன் இருப்பது:

கூட்டுறவு வங்கியில் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரோ ஏற்கனவே கடன் வாங்கி, அது வாராக்கடனாக இருந்தால் புதிய கடன் மறுக்கப்படும்.

7. கடன் உச்சவரம்பு அதிகரிப்பது:

கூட்டுறவு சங்க விதிகளின் படி, ஒவ்வொரு தனிநபருக்கும் அதிகபட்ச கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த வரம்பைத் தாண்டினாலும் புதிய கடன் வழங்கப்பட மாட்டாது.

இதையும் படியுங்கள்:
கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன் முகாம்: எந்த நாளில் என்ன கடன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
கூட்டுறவு vs தனியார் வங்கி
logo
Kalki Online
kalkionline.com