

இந்தியாவில் வீடு காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை. ஆனால் வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய காப்பீடு திட்டங்களாக இருக்கிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளம் போன்ற பேரிடர்கள் தொடர்ந்து நிகழ தொடங்கியுள்ளதால், வீடு காப்பீடு திட்டம், உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் பயனுள்ளதாக அமையலாம்.
பாரத் கிரஹ சுரக்ஷா இந்திய காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு வீட்டுக் காப்பீட்டு பாலிசி ஆகும். இது தீ, இயற்கை சீற்றங்கள் (நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி) மற்றும் திருட்டு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் வீட்டின் கட்டிடம் மற்றும் அதிலுள்ள பொருட்களின் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இது கட்டிட அமைப்பு (Home Building) மற்றும் வீட்டுப் பொருட்கள் (Home Contents) இரண்டையும் உள்ளடக்கியது, மேலும் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தனிப்பட்ட விபத்துக்களுக்கும் கூடுதல் விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் படி, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி வாடகைதாரர்களும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ள இந்த திட்டம் வழி வகுக்கிறது. சுருக்கமாக, 'பாரத் கிரஹ சுரக்ஷா' என்பது உங்கள் வீட்டை எதிர்பாராத ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு விரிவான வீட்டுக் காப்பீட்டுத் திட்டமாகும்.
இந்தியாவில் உள்ள நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, நேஷ்னல் இன்சூரன்ஸ் ஆகியவற்றிலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வீட்டின் கட்டிடம் மற்றும் வீட்டிலுள்ள தளபாடங்கள், சோலார் பேனல், உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. தீவிபத்து, வெடிப்பு, மின்னல், நிலநடுக்கம், வெள்ளம், புயல், நிலச்சரிவு, திருட்டு, கலவரங்கள் போன்றவற்றால் ஏற்படும் சேதங்களை உள்ளடக்கும். கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு, காப்பீட்டு பணத்தின் 2% தொகை வழங்கப்படும்.
ஆனால், வீடுகளுக்கான காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், இப்படியொரு காப்பீடு திட்டம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. வாழ்நாள் காப்பீட்டுக்கு பிரிமீயம் கட்டினால், ஒருவர் உயிரோடு இருந்தாலும் பிரிமீயத்தின் ஒரு தொகை மீண்டும் கிடைக்கும். ஆனால் வீடு காப்பீட்டுத் தொகையில் அப்படி இல்லை. எனவே இது தேவையற்ற செலவு என பலர் நினைக்கின்றனர்.
2015 பெரு வெள்ளத்தில் ஒரு குடும்பம் இந்த காப்பீட்டை பெற்றிருந்தால், ஓராண்டுக்கு சுமார் ரூ.2,000 பிரிமீயம் கட்டியிருந்தாலும் அதிகபட்சம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை தான் செலவாகியிருக்கும். அந்த செலவில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை தற்போது காப்பாற்றியிருக்கலாம் என்கின்றனர்.
யாரெல்லாம் இந்த காப்பீட்டை பெற தகுதியானவர்கள்
உங்கள் வீட்டிற்கும், வீட்டில் உங்கள் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோஃபா, டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அதுவே நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால், வீட்டு கட்டத்துக்கான காப்பீடு எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள உங்களின் பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு சொந்தமான கட்டடத்தில் கடைகள் நடத்தப்பட்டாலோ, வேறு தொழில்கள் நடத்தப்பட்டு வந்தாலோ, இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. (கடைக்காரர்களுக்கு வேறு காப்பீட்டுத் திட்டம் உள்ளது).
தோராயமாக 30 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு ஓராண்டுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை பிரீமியம் தொகை கட்ட வேண்டியிருக்கும். வீட்டின் மதிப்பு குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரீமியம் தொகை மாறுபடும்.
தெற்கெல்லாம் காப்பீடு வேண்டும் என்பதை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொண்டு, அதற்கான காப்பீட்டுத் தொகையை மட்டும் செலுத்தலாம்.
மழை வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வீடுகளுக்கோ, வீட்டில் உள்ள பொருட்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அல்லது தீ விபத்து போன்ற வேறு ஆபத்தான சூழல்களில் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அதாவது வீட்டை மீண்டும் கட்டுவதற்கு, காப்பீடு எடுத்த போது கட்டுமானப் பணிகளுக்கான செலவு என்னவாக இருந்ததோ, அதுதான் உங்கள் வீட்டுக்கான மொத்த காப்பீட்டுத் தொகையாக (sum insured) கிடைக்கும்.
எதற்கெல்லாம் காப்பீடு செய்யலாம்? எவ்வளவு கிடைக்கும்?
* வீட்டின் பகுதி சேதமடைந்திருந்தால், அதை சரி செய்வதற்காக செலவு, கட்டட பொறியாளர், கட்டட வடிவமைப்பாளருக்கான கட்டணம், இடிபாடுகளை அகற்றும் செலவு, வாடகை இழப்பு, மாற்று இடத்தில் கட்ட வேண்டிய வாடகை ஆகியவை வழங்கப்படும்.
* வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பாதியளவு சேதமடைந்திருந்தால் அதை சீர் செய்வதற்கான செலவுத்தொகையும், அதுவே வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்திருந்தால், அதே பொருள் அல்லது அதுபோன்ற வேறு ஒரு பொருள் வாங்குவதற்கான செலவுத் தொகை வழங்கப்படும்.
* தங்க நகை, விலையுயர்ந்த சிலை, ஓவியம் போன்ற கலைப் பொருட்கள் ஆகியவை பகுதியாக சேதமடைந்திருந்தால், அதை சீர் செய்வதற்கான செலவுத்தொகையும், விலையுயர்ந்த பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்திருந்தால், காப்பீடு எடுக்கும் போது அந்த பொருளின் மதிப்புக்கான தொகையும் வழங்கப்படும்.
* இது மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழல்களில் உங்கள் வீடு, உடமைகள் பாதிக்கப்பட்டு, நீங்களும், உங்கள் துணையும் உயிரிழக்க நேர்ந்தால், ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், வீட்டு கட்டடத்துக்கான காப்பீடு எடுத்திருந்தால், வீட்டுப் பொருட்களுக்கான காப்பீட்டை தனியாக எடுக்க வேண்டாம். வீட்டு காப்பீட்டுத் தொகையில், 20% வீட்டில் உள்ள பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். அதாவது 50 லட்சத்துக்கான காப்பீடு எடுத்திருந்தால், வீட்டில் உள்ள பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கான காப்பீடு அதில் வழங்கப்படும். வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு 10 லட்சத்துக்கும் மேல் இருந்தால், அவற்றுக்கு தனியாக காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வெள்ளம், புயல், இயற்கை பேரிடர், தீவிபத்து நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த வீட்டில் இருந்து ஏழு நாட்களுக்குள் திருடு போனால் அதற்கான பணம் வழங்கப்படும்.
* இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் உங்களுக்கு தேவையான காப்பீடு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக சென்னையில் வசிப்பவர்கள் தீ விபத்து, வெள்ளம், புயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதுவே நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த சேதத்திற்கான காப்பீட்டை எடுத்துகொள்ளலாம். எந்தெந்த காப்பீட்டை தேர்வு செய்கிறோமோ, அதற்கான பிரிமீயம் தொகை மட்டும் செலுத்த வேண்டும்.
* இது மட்டுமல்லாமல் வீட்டில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளுக்கு கூட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெற முடியும். உதாரணமாக, தண்ணீர் தொட்டி உடைப்பு, குழாய்கள் சேதமடைந்து உடைப்பு ஏற்படுதல் போன்றவற்றிற்கு இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெறலாம். ஆனால் நீங்கள் வீட்டில் பழுதுபார்ப்பு செய்யும் போது ஏற்படும் தவறுதலால் குழாய்கள் உடைந்தாலோ, தண்ணீர் பாய்ச்சும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
வீடு காப்பீடு விண்ணப்பிக்க, முதலில் உங்கள் வீட்டின் மதிப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பிட்டு, பல்வேறு நிறுவனங்களின்
பாலிசி திட்டங்கள் மற்றும் பிரீமியங்களை ஒப்பிட்டு, உங்கள் தேவைக்கேற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைனில் அல்லது நேரடியாக விண்ணப்பித்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து(வீட்டின் உரிமை ஆவணங்கள், புகைப்படங்கள், அடையாளச் சான்றுகள் ), பிரீமியத்தைச் செலுத்த வேண்டும்.
எவ்வாறு வீட்டுக் காப்பீடு கோருவது? :
* வீட்டில் ஏதேனும் விபத்துகள், திருட்டு சார்ந்த இழப்புகள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு நிறுவனம் மற்றும் காவல் துறையை அணுக வேண்டும்.
* அடுத்து காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, காப்பீடு கோர வேண்டும். மதிப்பீட்டாளர் வரும்போது, அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.