

டிஜிட்டல் யுகத்தில், யூடியூப் வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், தற்போது மிகப்பெரிய வருமான தளங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. சமீபகாலமான பலரும் யூடியூபர்கள் போடும் உணவு ரிவ்யூ (Review) பார்த்து அந்த இடத்திற்கு உணவு சாப்பிடச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அண்மை காலமாக பல யூடியூபர்களும் நேரடியாக உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை வாங்கி சுவைத்து அந்த உணவு எப்படி இருக்கிறது, உணவின் விலை மற்றும் அந்த உணவகத்தில் எந்த உணவு ஸ்பெஷல் என்றெல்லாம் ரிவ்யூ (Review) செய்து அதை யூடியூபில் பதிவேற்றம் செய்கின்றனர். இவர்களின் ரிவ்யூ (Review)வை பார்த்து பல உணவு பிரியர்களும் அந்த உணவகங்களை தேடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் விளம்பரங்கள் அல்லது தவறான வழிகாட்டுதல்களால் உணவு பிரியர்களுக்கு ஏமாற்றமும் ஏற்படலாம். அதாவது இப்படி உணவு ரிவ்யூ செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே உணவின் தரம், சுவை, அந்த உணவகத்தின் உணவுப்பொருட்களின் விலை பற்றி உண்மையை சொல்கின்றனர்.
ஆனால் பல யூடியூபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு (Paid Promotions) உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை ஆராயாமல், சுவையும், தரமும் நன்றாக இல்லாவிட்டாலும் விளம்பரத்திற்காக மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை மட்டுமே பதிவு செய்கின்றனர். இதனை உண்மை என்று நம்பி செல்லும் பலரும் ஏமாற்றம் அடைகின்றனர்.
அந்த வகையில் சமீபகாலமாக உணவு விமர்சனம் (Food Review) என்ற பெயரில் சிலர் தவறான தகவல்களையும், மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது. பார்வையாளர்களைக் கவரவும், விளம்பர வருவாய்க்காகவும் சில சமூக வலைதளப் படைப்பாளர்கள் (Influencers) உண்மையான சுவை மற்றும் சுகாதாரத்திற்குப் பதிலாக எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புகின்றனர்.
உணவின் உண்மையான சுவை மற்றும் தரத்தை விட, உணவகத்தை இழிவுபடுத்துவது அல்லது மிகைப்படுத்திப் புகழ்வது போன்ற பல்வேறு யுத்திகளை பார்வையாளர்களைக் கவருவதற்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கடையின் உரிமம் அல்லது உணவு தயாரிக்கும் முறை பற்றி முழுமையாகத் தெரியாமல், வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் வைத்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.
சில சமயங்களில் சிறிய மற்றும் நடுத்தர உணவகங்களுக்கு செல்லும் யூடியூபர்கள் உணவு சாப்பிட்ட பின்னர் பணம் கொடுக்காமலும் அல்லது பணம் கேட்டால் வியாபாரத்தை பாதிக்கும் வகையில் உணவகத்தை பற்றி தவறான ரிவ்யூ போடுவோம் என்று மிரட்டுவதும் மற்றும் கட்டணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதுபோன்ற செயல்களால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து 'ஃபுட் ரிவ்யூ' (Food Review) செய்யும் யூடியூபர்களுக்கு தமிழக அரசு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை (FSSAI) புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
யூடியூபர்கள் மற்றும் உணவு விமர்சகர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற கடைகளில் மட்டுமே ஃபுட் ரிவ்யூ (YOUTUBERS FOOD REVIEW) செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது.
இனி வரும் நாட்களில் உணவகங்களின் வெளித்தோற்றத்தையும் அல்லது உள் அலங்காரத்தையோ மட்டுமே காட்சிப்படுத்தி ஃபுட் ரிவ்யூ வீடியோக்களை வெளியிடக் கூடாது என்றும், நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளை கட்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் உணவகங்களை வீடியோ எடுக்க செல்லும் யூடியூபர்கள் கடையின் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல், அங்கு சமையலறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா மற்றும் உணவுகள் தயாரிக்கப்படும் இடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாகக் கண்காணித்து அதை கண்டிப்பாக மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது. அதாவது உணவகங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் தூய்மை குறித்து நுகர்வோருக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே யூடியூபர்களின் பதிவுகள் அமைய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பல யூடியூபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு (Paid Promotions), உணவின் தரம் மற்றும் கடையின் சுகாதாரம் குறித்து ஆராயாமல், தரமற்ற உணவகங்களையும் நல்ல உணவகங்கள் என்று பொய் கூறி வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ரிவ்யூக்களை வெளியிடுவதாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இதனை முறைப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி அறிவுறுத்தலை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
யூடியூபர்கள், பணம் பெற்று செய்யப்படும் வீடியோக்களில், அது ஒரு Paid Promotion அல்லது Sponsored Content என்பதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
எனவே உணவு பிரியர்கள் ஒரு குறிப்பிட்ட உணவகத்திற்கு சாப்பிட செல்வதற்கு முன்பு ஒரே ஒரு யூடியூபரின் ரிவ்யூவை மட்டும் நம்பாமல், Google Maps அல்லது பிற சமூக வலைத்தளங்களில் மற்ற வாடிக்கையாளர்கள் அளித்துள்ள நம்பகமான ரேட்டிங் மற்றும் கருத்துக்களைப் (Reviews) படித்து விட்டு திருப்தியாக இருந்தால் மட்டும் அந்த உணவகத்திற்கு செல்லுங்கள்.
இந்த விதிகளுக்கு முரணாகத் தவறான தகவல்களைப் பரப்பி, மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் யூடியூபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.