

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலை காரணமாக சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28-ம்தேதி அன்று தொடங்கிய நிலையில் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்கள் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. வளைகுடா நாடுகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு மாற்று வழிகளில் எரிபொருளை கொண்டு வரவும், பற்றாக்குறையை சமாளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் சமையல் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு சிலிண்டர் வாங்கிய பின்னர் 25 நாட்களுக்கு பின்னரே மற்றொரு சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் கிடைக்காத நிலையில் பலரும் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறி வருகின்றனர்.
இதற்கிடையில், குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு ஒரு நம்பகமான தீர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பிஎன்ஜி (PNG - Piped Natural Gas) கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் அந்த வசதிக்கு மூன்று மாதங்களுக்குள் மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மறுப்பு தெரிவிக்கும் நுகர்வோருக்கு சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பூமிக்கடியில் குழாய்கள் மூலம் (PNG) வீடுகளுக்கு நேரடியாக கியாஸ் வழங்கும் இந்த முறை, இடையறாத மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்கிறது.
இதன் மூலம் 24 மணி நேரமும் கேஸ் வினியோகம் செய்யப்படுவதுடன், மக்கள் இனிமேல் சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு அதிகநாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பிஎன்ஜி மூலம் வீடுகளுக்கு குறைந்த அழுத்தத்தில் கேஸ் வினியோகிக்கப்படுவதால் பாதுகாப்பானது மட்டுமின்றி பயன்படுத்தும் கேசுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்பதால் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன் மாதந்தோறும் சிறிதளவு பணம் சேமிக்கவும் முடியும். காற்றை விட லேசானது என்பதால் கசிவு ஏற்பட்டால் விரைவாக காற்றில் பரவிவிடும் என்பதால் எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.
பிஎன்ஜி இணைப்புக்கு வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகைத்தாரர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள், தொழில்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்பு அந்தந்த பகுதிகளில் பிஎன்ஜி குழாய் கேஸ் இணைப்பு உள்கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்று தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிப்பது நல்லது. பிஎன்ஜி இணைப்பு வேண்டும் என்பவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குழாய் கேஸ் இணைப்பு நிறுவனத்திற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு அல்லது பிற அடையாள சான்று, முகவரி சான்று(மின்சார கட்டண ரசீது, சொத்து ஆவணங்கள் அல்லது வாடகை ஒப்பந்தம்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உரிமை அல்லது குத்தகை சான்று உடன், பெயர், போன் நம்பர், முகவரி, இணைப்பின் வகை (வீட்டு உபயோகம், தொழில் அல்லது வணிகம்) போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டிற்கு பிஎன்ஜி வசதியை செய்து கொடுப்பதற்கு உதவுவார்கள்.
தற்போது சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் டோரண்ட் கியாஸ் நிறுவனம் சேவையை விரிவுபடுத்தி, 200 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி குழாய் பதித்து 5000 பேருக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.