

நவம்பர் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்காக பலரும் ஷாப்பிங்கை தொடங்கி விட்ட நிலையில், தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (நவம்பர் 3) முதல் நவம்பர் 7-ம் தேதி வரை முதியோர் உதவித்தொகை பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இதன்படி நடப்பாண்டு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தீபாவளி பண்டிகை முன்னிட்டு - விலையில்லா வேட்டி, சேலைகள் நியாய விலைக் கடைகளில் இன்று (03.11.2026) முதல் வழங்கப்படும்; முதியோர் ஓய்வூதியதாரர்கள் 07.11.2026 வரை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.
அதன்படி, தீபாவளி 2026 பண்டிகைக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு இன்று (03.11.2026) முதல் வழங்கப்படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 07.11.2026-க்குள் தங்கள் ஊரில் உள்ள நியாய விலைக் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் எவ்வித தாமதமுமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியாய விலைக் கடைகளுக்கான நகர்வு மற்றும் விநியோகப் பணிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
* தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தீபாவளி 2026 இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.
* வேட்டி, சேலை வாங்கச் செல்லும் போது தவறாமல் குடும்ப அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
* குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டை எடுத்துச் செல்லலாம்.
* ரேஷன் கடை ஊழியரால் கைரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.
ரேஷன் கடையில் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இலவச வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக அரசு, ரேஷன் கடையில் அனைவரும் உடுத்திக் கொள்ளும் வகையில் தரமான வேட்டி சேலைகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனால் தற்போது வழங்கப்படும் வேட்டி, சேலைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்போது வழங்கப்படும் வேட்டி, சேலைகளைப் போலவே தான் பொங்கல் பண்டிகைக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது