

வருங்கால தேவைக்கு இன்றே முதலீடு செய்வது மிகப்பெரிய பலனை அளிக்கும். ரிஸ்க் இல்லாத சேமிப்புகளான அஞ்சல் மற்றும் வங்கி சேமிப்புத் திட்டங்களில் வட்டி குறைவு. ஆனால் சந்தை அபாயங்களுக்கு உள்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ்ஐபி உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தால் 12%-க்கும் மேல் லாபம் கிடைக்கும்.
குறைந்த காலத்தில் அதிக லாபத்தைப் பெற முயற்சிப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டையே தேர்ந்தெடுப்பர். அதிலும் சந்தை நிலவரங்கள், பங்குகள் பற்றி நன்றாக தெரிந்தால் மட்டுமே தன்னிச்சையாக முதலீடு செய்ய முடியும். இல்லையெனில் நிதி ஆலேசகரின் உதவியுடன் தான் முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்யும் போது நிதி ஆலேசகருக்கு கமிஷன் வழங்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் டைரக்ட் மற்றும் ரெகுலர் என இருவகையான முதலீடுகள் உள்ளன. நிதி ஆலோசகரின் உதவியுடன் முதலீடு செய்யும் போது, உங்கள் பணம் ரெகுலர் வகையின் கீழ் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.
தன்னிச்சையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் கணக்குகளும் ரெகுலர் வகையில் சேர்ந்து விடுவதாக புகார்கள் அதிகரித்து வந்தன. இதனால் வங்கிகள் மற்றும் முதலீட்டு செயலிகளுக்கு தேவையின்றி கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருந்து வந்தது.
வங்கிகள், யுபிஐ அல்லது முதலீட்டு செயலிகளின் மூலம் முதலீடு செய்யும் போது மறைமுகமாக விநியேகஸ்தர் குறியீடு சேர்க்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம். முதலீட்டுப் பிளானை சரியாகத் தேர்வு செய்யாத போதும், அது ரெகுலர் வகையில் சேர்ந்து விடும்.
இந்நிலையில் தன்னிச்சையாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் இயல்பாகவே டைரக்ட் வகையில் சேரும்படி விதிமுறை கொண்டு வரப்பட்டது.
புதிய விதி:
* இடைத்தரகர் உதவியின்றி ஒரு முதலீட்டாளர் நேரடியாக முதலீடு செய்தால், இனி இயல்பாகவே அது டைரக்ட் பிளான் ஆக எடுத்துக் கொள்ளப்படும்.
* இடைத்தரகர் மூலம் வழிகாட்டல் அல்லது நிதி ஆலோசனை பெற்று முதலீடு செய்பவர்கள் மட்டுமே ரெகுலர் பிளான் கீழ் முதலீடு செய்வர்.
டைரக்ட் vs ரெகுலர்:
மியூச்சுவல் ஃபண்டில் டைரக்ட் மற்றும் ரெகுலர் பிளான் ஆகிய இரண்டு வகையான முதலீடுகளுக்கும் முதலீடு செய்யப்படும் ஃபண்ட் மேனேஜர், போர்ட்ஃபோலியோ, மற்றும் சந்தை அபாயங்கள் அனைத்துமே ஒன்று தான். முதலீடு செய்யும் முறை மற்றும் கட்டணங்களில் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.
கமிஷன் கட்டணம்:
டைரக்ட் பிளானில் இடைத்தரகர் இல்லாததால், கமிஷன் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ரெகுலர் பிளானில் இடைத்தரகர் தலையீடு இருப்பதால் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.
செலவு விகிதம்:
டைரக்ட் பிளானில் 0.5% முதல் 1.0% வரை செலவு குறைவு. ரெகுலர் பிளானில் கமிஷன் தொகையால் செலவு விகிதம் அதிகம்.
ஃபண்ட் தேர்வு:
டைரக்ட் பிளானில் முதலீட்டாளரே ஃபண்டை சுயமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ரெகுலர் பிளானில் ஃபண்ட் தேர்வில் நிதி ஆலோசகர் உதவுவார்.
வருமானம்:
செலவு குறைவு என்பதால் டைரக்ட் பிளானில் வருமானம் அதிகம். ரெகுலர் பிளானில் செலவு அதிகம் என்பதால், வருமானம் சற்று குறைவு.
யாருக்கு எந்த பிளான் சிறந்தது?
டைரக்ட் பிளான்:
முதலீட்டில் நேரத்தை செலவிடுபவர்கள், தன்னிச்சையாக ஃபண்டுகளைத் தேர்வு செய்து கண்காணிக்கத் தெரிந்தவர்கள், பங்குச்சந்தை நிலவரம் குறித்து தெரிந்தவர்கள் மற்றும் கமிஷனைத் தவிர்த்து கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு டைரக்ட் பிளான் ஏற்றது.
ரெகுலர் பிளான்:
ஃபண்டை தேர்வு செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள், சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவரகள், நிதி ஆலோசகரின் வழிகாட்டல் தேவைப்படுபவர்களுக்கு ரெகுலர் பிளான் ஏற்றது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.