

சாலை விபத்துகளை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், நேற்று சென்னை பெருநகர போக்குவரத்து துறை போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது சுமார் 1,407 வாகனங்கள் பதிவெண் இல்லாமல் சாலையில் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதிவுமில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கை இனிவரும் நாட்களிலும் தொடரும் என்பதால், வாகன ஓட்டிகள் வாகனங்களைப் பதிவு செய்து பதிவெண்ணைப் பெறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கினால் பொதுமக்களே புகார் அளிக்கும் வகையில் whatsapp எண்ணையும் வெளியிட்டுள்ளது சென்னை போக்குவரத்து காவல் துறையினர்.
ஒரு சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை இயக்குவதன் மூலம், சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அசௌகரியமான சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இதனால் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதனைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களும் காவல்துறைக்கு உதவும் வகையில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல் துறை.
சாலையில் இரு சக்கர வாகனங்களை யாரேனும் ஆபத்தான முறையில் இயக்கினால் உடனடியாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதவிர Kaaval Udhavi மொபைல் செயலி மற்றும் 90031 30103 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகவும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (அக்டோபர் 4) நள்ளிரவு சென்னையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இந்த பைக் ரேஸின் போது சென்னை ஐஐடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து குகன் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் போது பின்னால் வந்த வந்த மாணவர்கள் கீழே விழுந்த பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் குகன் தான் பைக்கை ஓட்டினாரா அல்லது பின்னால் அமர்ந்து வாந்தாரா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் நள்ளிரவில் அடிக்கடி இதுபோன்ற பைக் ரேஸ் போட்டிகள் நடைபெறுவதைத் தடுக்க, அவ்வப்போது மேம்பாலங்களை போக்குவரத்து துறை போலீசார் மூடி விடுவது வழக்கம். ஆனால் நேற்று நள்ளிரவு இதனையும் மீறி பைக் ரேஸில் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கினாலோ அல்லது பைக் ரேஸிங்கில் இளைஞர்கள் ஈடுபட்டாலோ உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது