

நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்ததால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து தவெகவிற்கு இடதுசாரிகள் கட்சிகள், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்த நிலையில் கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தது அதிமுகவிற்குள் பிளவை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் காங்கிரசில் 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் தவெகவிற்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடம் கொடுக்கப்படும் என தகவல் உண்மையானால், தவெகவிற்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
தவெகவிற்கு நாங்கள் ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது, கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆளுநர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறு திசையில் நகர்கிறது என்று கவலை தெரிவித்தார்.
மக்களின் தீர்ப்பு என்பது திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கு எதிராகத்தான் இருந்தது. அதேசமயம் அறுதி பெரும்பான்மையை யாரும் பெறவில்லை. இதில் தவெகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்ததால், அந்த அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பதற்காக தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக அறிவித்திருக்கிறது.
அதிமுகவை அவர்கள் ஆட்சியில் சேர்த்துக்கொள்வதோ, அமைச்சரவையில் இடம் தருவதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. அவர் சொல்லியிருக்கிற நல்லாட்சி என்பதற்கே இது விரோதமானது. ஏற்கனவே இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
அத்தகைய கட்சியின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சியை தொடர்வது என்பது மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அமையும். அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என நான் நம்புகிறேன். இவற்றை மீறி அதிமுகவின் ஒரு குரூப் ஆதரவை பெற்றாலோ, அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைக்கும் முடிவிற்கு தவெக செல்லுமானால் எங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய நேரிடும். மேலும் தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே இடதுசாரிகளின் ஆதரவு நீடிக்குமா என்பது தெரியும் எனத் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தின் இந்த கருத்து தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேசமயம் சிபிஎம் கட்சியின் இந்த திடீர் எச்சரிக்கை காரணமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தற்போது புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.