

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் நான்கு வகையான டெங்கு வைரஸ் பரவி வருவது ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உள்நாட்டில் "டெங்கிஆல்" தடுப்பூசி உருவாக்கும் இறுதிக்கட்ட சோதனைகளில் ஐசிஎம்ஆர்(ICMR) தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் பல வைரஸ்கள் தாக்கினால் ஆபத்து அதிகரிக்கும் என்பதால், அனைத்து வகைகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட இந்த தடுப்பூசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு டெங்கு தடுப்பூசி மருந்தான 'டெங்கிஆல்'(DengiAll) தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்(ICMR) பனாசியா பயோடெக் நிறுவனமும்(Panacea Biotech) இணைந்து தீவிர 3ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. பனாசியா பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும். இதன் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை உறுதி செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பெரிய அளவில் சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்தியா உள்ளிட்ட 125 நாடுகளில் கொசுக்களால் பரவும் டெங்கு நோயானது, சுகாதாரப் பணியாளர்களுக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெங்குவை விரட்ட உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளது. ஒரே நேரத்தில் பல வைரஸ்கள் தாக்கினால் ஆபத்து அதிகரிக்கும் என்பதால், அனைத்து வகைகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட இந்த புதிய தடுப்பூசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பரிசோதனை நிலை:
நாடு முழுவதும் 20 மையங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 8,000 பேருக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட சோதனைகளில் இந்த உள்நாட்டு தடுப்பூசியால் எந்த ஒரு பக்கவிளைவுகளோ அல்லது பாதுகாப்பு குறைபாடுகளோ கண்டறியப்படவில்லை. இது ஒரே ஒரு டோஸ் (single dose) மூலம் டெங்குவின் நான்கு வகையான வைரஸ் பிரிவுகளுக்கும் எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டுத் தடுப்பூசி பரிசோதனைக் கட்டத்தில் இருக்கும் அதே வேளையில், ஜூலை 2026 இல் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) ஜப்பான் நிறுவனம் தயாரித்த 'கியூடெங்கா' என்ற வெளிநாட்டு டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் பயன்படுத்துவதற்கு முதன்முறையாக அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட QDENGA என்ற டெங்கு தடுப்பூசி இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் தடுப்பூசியாகும். ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தகேடா(Takeda) நிறுவனம் தயாரித்துள்ள கியூடெங்கா தடுப்பூசி 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 3 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும். 0.5 மி.லி அளவில் தோலுக்கு அடியில் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி டெங்குவை ஏற்படுத்தும் நான்கு வகையான வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டது. இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற இந்த முதல் தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பின் சோதனையில் வெற்றி பெற்று உள்ளது. தரம், பாதுகாப்பு, செயல்பாடு ஆகியவற்றில் உலக தரத்துக்கு இணையாக உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்தது.
டெங்குவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே முழுமையான தீர்வு அல்ல என்பதால் தேவையற்ற நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் அவசியமாகும். டெங்கு வராமல் இருக்க வீட்டின் அருகில் உள்ள பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள் மற்றும் பூந்தொட்டி தட்டுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், குடிநீர் தொட்டிகள் மற்றும் பீப்பாய்களை எப்போதும் மூடி வைக்க வேண்டியதும் அவசியம். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரித்தாலே கொசுக்கள் உற்பத்தியாகாது. அத்துடன் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் வெளியே செல்லும்போது கை, கால்களை முழுமையாக மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். தூங்கும் நேரங்களில் கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.