பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற புது அறிவிப்பை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வாகனம் ஓட்டும்போது போன் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. பொதுவாக டூ வீலர் மற்றும் கார் ஓட்டுநர்கள் போன் பயன்படுத்தினால், போக்குவரத்து போலீஸார் எளிதில் கண்டுபிடித்து கண்டிப்பார்கள். ஆனால், பேருந்து ஒட்டுநர்கள் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் எளிதில் கவனிக்க முடியவில்லை.
இப்படி ஓட்டுநர்கள் செய்வதால் விபத்துக்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன. அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தப்படியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் அரசு பேருந்துகள் பேருந்தை இயக்கும்போது போன் பேசினால், 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
இது தொடர்பாக, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்போது சமூக வலைதளங்களில் யார் என்ன செய்தாலும், குறிப்பாக அரசு ஊழியர்கள் எந்த தவறு செய்தாலும் வெளியே தெரிந்துவிடுகிறது. போர போக்கில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுங்கின்றனர். இதனைப் பார்க்கும் மக்கள் கேள்வி எழுப்பி பெரிய பிரச்னையாக்கி விடுகிறார்கள். இதனால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.
அப்படித்தான் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கியப்படியே பல மணி நேரம் போன் பேசுவதுபோன்ற வீடியோ அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்துதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சமீபத்தில்கூட சில அட்வைஸ் விடுக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், அவமதிக்கக் கூடாது, மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும், போன்ற அட்வைஸ் வழங்கப்பட்டன.