#BREAKING: நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு.. குட் நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்.!

ஊக்கத்தொகை
CM vijay
Updated on

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 10) மீண்டும் தொடங்கியது. சட்டமன்றம் தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு விழாக்களிலும் தம்ழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்.

முதல்வரின் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கு நற்செய்தியை அறிவித்தார் முதல்வர் விஜய்.

இதன்படி நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தோகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குறைந்த செலவில் தொடர் லாபம்... மணத்தக்காளி கீரை விவசாயம்!
ஊக்கத்தொகை

சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகை ரூ.289 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சன்ன ரக நெல் இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகை ரூ.159 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது ரக நெல் இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,600-க்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கரும்புக்கான மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.3,290.50 ஆக உள்ளது. இதன்படி மத்திய அரசின் விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை ஆகியவை சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும். ஒரே ஆண்டில் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.360.50 உயர்ந்துள்ளது.

ஊக்கத்தொகை உயர்வு குறித்த முதல்வர் விஜய்யின் அறிவிப்பு, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இடைத்தரகர்களைத் தடுக்க, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நெல்லுக்கான பணம் வரவு வைக்கப்படுகிறது.

Tamilnadu farmers
Tamilnadu farmers
இதையும் படியுங்கள்:
இனி விவசாய அடையாள எண் தேவையில்லை.! பயிர் காப்பீட்டில் பெரிய மாற்றம்.!
ஊக்கத்தொகை

தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், ஊக்கத்தொகையைச் சேர்த்து வழங்கி வருகிறது மாநில அரசு. இந்த ஊக்கத்தொகை விவசாயிகளின் வருவாயைக் கூட்டுவதோடு, எப்போதும் மாநில அரசு துணை நிற்கும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளார் முதல்வர் விஜய்.

மேட்டூர் அணையைத் திறக்காதது மற்றும் காவிரியில் இருந்து நீர் வராதது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டில் குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. அதோடு டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகின. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவை விட குறைந்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

கரும்பு கொள்முதலில் மத்திய அரசின் விலையானது, அந்தந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளின் உறைதிறன் மற்றும் சர்க்கரை பிழிதிறன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

மத்திய அரசு நிர்ணயித்த அடிப்படை ஆதார விலையுடன், மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று ஊக்கத்தொகையை உயர்த்தியதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com