
மது விற்பனை என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அரசே விற்கும் மது பானமாகட்டும் அல்லது கள்ளச் சாராயமாகட்டும் போதைக்காக குடிக்கும் பழக்கம் தற்போது வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களிடையேயும் அதிகரித்து விட்டது. அது மட்டுமின்றி, குடிப்பழக்கம் நமது கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகவே தற்போது மாறிவிட்டது. அலுவலகக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்புகள், இரவு விருந்துகள், கோயில் திருவிழா, பிறந்த நாள், கல்யாணம், காதுகுத்து... என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், சரக்கு பார்ட்டி இல்லாமல் எந்த விழாவும் இல்லை எனும் நிலை தற்போது நிலவி வருகிறது. முக்கியமாக, இளைஞர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் பெண்களும் கூட குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வந்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. இதனாலேயே தமிழகத்தில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமில்லாமல், இதன் மூலம் தமிழக அரசுக்கு வருமானமும் தினமும் கொட்டுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விடுமுறை தினங்களில் எங்கே சரக்கு கிடைக்கும் என்று குடிமன்னர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. சம்பந்தப்பட்டவர் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று முடிவெடுத்தால் மட்டுமே அதிலிருந்து தப்பிக்க முடியும். மற்றபடி இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிக்க வேறு வழியேயில்லை.
தமிழகத்தில் தற்போது 4,500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடை திறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே மது பிரியர்கள் சரக்கு வாங்க கால் கடுக்க மதுக்கடை வாசலில் நின்று தவமிருப்பதை பல இடங்களிலும் தற்போது பார்க்க முடிகிறது.
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு, 100 முதல், 120 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடப்பதாகவும், பண்டிகைக் காலங்களில் ஒரே நாளில் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாட்களில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் 454 கோடியே 11 லட்ச ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையானதாக ‘டாஸ்மாக்' வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போகி பண்டிகை அன்று185 கோடியே 65 லட்ச ரூபாய்க்கும், பொங்கல் பண்டிகை அன்று 268 கோடியே 46 லட்ச ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 450 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்த வருடம் மேலும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையை அதிகரித்து வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் சாதனையாக இருக்கக் கூடாது. தமிழக அரசு டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இன்றைய இளைய சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.