

இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாரத் ஸ்டேஜ் 7 (BS-7) 2029 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரே-7 விதிமுறைகளின் அடிப்படையில் BS-7 விதிமுறைகள் வகுக்ககப்பட்டுள்ளன.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு, பொதுமக்கள் அடுத்த 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2029 முதல் BS-7 விதிகள் 3 கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளன.
ஒரு வாகனத்தின் செயல்திறன் நன்றாக இருக்கிறது என்பதை அறிவிக்கும் சுற்றுச்சூழல் வாகன பாஸ்போர்ட்டும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாஸ்போர்ட்டில் எரிபொருள் பயன்பாடு, வாகனங்களின் மாசு மற்றும் பேட்டரி ஆரோக்கியத்தை தெரிவிக்கும் தகவல்கள் அடங்கியிருக்கும்
1. முதல் கட்டமாக 2029 ஏப்ரல் 1 முதல் எரிபொருள் பயன்பாடு, வாகனப் புகை வெளியேற்றம் மற்றும் பேட்டரி செயல்திறன் தொடர்பான விதிகள் அறிமுகமாக உள்ளன.
2. இரண்டாவது கட்டமாக 2031 முதல் பிரேக் மற்றும் டயர் தேய்மானத்துக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
3. மூன்றாவது கட்டமாக 2035 முதல் கூடுதல் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வரும்.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மட்டுமின்றி, மின்சார வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. வெளி மின்சாரத்தில் சார்ஜ் ஏற்றப்படும் ஹைபிரிட் வகை வாகனங்களின் பேட்டரிகள், 75% செயல்திறனை தக்க வைக்க வேண்டியது அவசியம். குறிப்பாக 5 ஆண்டுகள் இயக்கம் அல்லது 1 லட்சம் கி.மீ. வரையிலான ஓட்டத்திற்குப் பிறகு செயல்திறன் தக்க வைப்பு கட்டாயமாக்கப்படும்.
இதற்கு முன் நடைமுறையில் இருந்த BS-4 மற்றும் தற்போது அமலில் இருக்கும் BS-6 உள்ளிட்ட விதிமுறைகள், வாகனத்தின் என்ஜின் எக்ஸாஸ்ட் வழியாக வெளியேறும் புகையை மட்டுமே கட்டுப்படுத்தின. ஆனால் BS-7 விதிமுறைகள் முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
புகை வெளியீடு இல்லாத காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மாசற்றவையாக உள்ளன. இருப்பினும் பிரேக் மற்றும் டயர் தேய்மானம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் உண்டு. ஆகவே, இந்த பிரேக் மற்றும் டயர் கட்டுப்பாடுகள் வழக்கமான மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
BS-7 ஏற்படுத்தும் தாக்கங்கள்:
* புதிய விதிகளின் படி புதிய பிரேக் பேட்கள், அதிநவீன சென்சார்கள் மற்றும் மேம்பட்ட டயர்களை பயன்படுத்த வேண்டும் என்பதால் வாகன தயாரிப்பு செலவு உயரும். இதனால் கார்களின் விலையை உயர வாய்ப்புள்ளது.
* BS-7 அளவிற்கு டீசல் என்ஜின்களை தரம் உயர்த்துவது கூடுதல் செலவை ஏற்படுத்தும். இதனால் சிறிய வகை டீசல் கார்கள் சந்தையில் இருந்தே வெளியேற வாய்ப்புள்ளது.
* வாகனத்தில் பிரேக்கை அழுத்தும் போது ஏற்படும் உராய்வால் மிகச்சிறிய நுண் துகள்கள் காற்றில் கலக்கின்றன. BS-7 விதிமுறைளில் பிரேக் பேட்களின் துகள்கள் வெளியாவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதால், காற்றில் கலக்கும் நுண்துகள்களின் எண்ணிக்கை குறையும். இதனால், சுகாதாரக் கேடுகள் குறையும்.
* தரம் குறைந்த மலிவான எலெக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு, நீடித்து உழைக்கக் கூடிய எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வரும்.
வான ஓட்டிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:
* நீடித்து உழைக்கும் உதிரி பாகங்கள் கிடைக்கும்.
* வாகனத் துகள்கள் காற்றில் கலப்பது தடுக்கப்படுவதால், சுவாசக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் குறையும்.
* எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு நம்பகமான பேட்டரி கிடைக்கும்.
வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
* புதிய வாகனங்களின் விலை கணிசமாக உயரும்.
* பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் செலவு அதிகரிக்கும்.
* டீசல் கார்கள் இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது.
பழைய வாகனங்களுக்கு பாதிப்பு இருக்குமா?
புதிய விதிகள் புதிய கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், ஆர்.சி. முடியும் வரை பழைய வாகனங்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.