வெறும் 5 ரூபாய் தான்..! வந்துவிட்டது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!

வெறும் 5 ரூபாயில் நவீன பயணம் - உலகத்தையே வியக்க வைக்கும் இந்திய ரயில்வேயின் பிரம்மாண்டம்.
ஹைட்ரஜன் ரயில்
Hydrogen Train
Updated on

இந்தியாவில் ரயில்வே துறையை நவீனப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி ஜூலை 17-ல் அறிமுகமாகவுள்ள ஹைட்ரஜன் ரயில், இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்சார ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயல்களின் வரிசையில், மெட்ரோ மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதுதவிர புல்லட் ரயிலுக்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை வருகின்ற ஜூலை 17-ம் தேதி தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஹைட்ரஜன் ரயிலுக்கான சோதனை ஓட்டத்தை கடந்த வருடம் ஜூலை 25-ல் நிகழ்த்தி சாதனைப் படைத்தது சென்னை ஐசிஎஃப் நிறுவனம். இந்நிலையில் இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாகவுள்ளது நாட்டின் பெருமைமிகு ஹைட்ரஜன் ரயில்.

இதையும் படியுங்கள்:
ரூ.5,000 சரிவு.! இனி பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் தங்கம் வாங்கலாம்.!
ஹைட்ரஜன் ரயில்

உலகளவில் சீனா, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஹைடர்ஜன் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்னும் 6 நாட்களில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஹைடர்ஜன் ரயிலை இயக்கும் 5-வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என்றில்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளை மட்டுமே கொண்டு மணிக்கு சுமார் 140 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் ஆற்றல் படைத்தது ஹைட்ரஜன் ரயில். ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் உலகின் மற்ற 4 நாடுகளும் 500 முதல் 600 குதிரைத் திறன் கொண்ட ரயிலையே இயக்குகின்றன. ஆனால் இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை 1,200 குதிரைத் திறனுடன் இயக்கவுள்ளது. இது ரயில்வே துறையில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு சீறிப் பாய உள்ளது ஹைட்ரஜன் ரயில். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஒரு ஹைட்ரஜன் ரயிலைத் தயாரிக்க சுமார் ரூ.80 கோடி வரை செலவாகும்.

கடந்த 2023-24 நிதியாண்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில, 35 ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்க ரூ.2,800 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதில் தற்போது முதல் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மற்ற ரயில்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

India’s first hydrogen train
India’s first hydrogen train

சென்னை ஐசிஎஃப் நிறுவனம் உருவாக்கும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், ஹரியானாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் முதல் சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.

ஹைட்ரஜன் ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிக்கெட் கட்டணம் மெட்ரோ ரயில் கட்டணத்தை விடக் குறைவு என்பதால், சாமானிய மக்களும் ஹைட்ரஜன் ரயிலில் பயணிக்க முடியும்.

இந்தக் கட்டணம் கிட்டத்தட்ட மின்சார ரயில் கட்டணத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைட்ரஜன் ரயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், டிக்கெட் விலை குறைவாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாளை இந்தியா திரும்புகிறார். இதனையடுத்து பிரதமர் ஜூலை 17-ல் ஹைட்ரஜன் ரயிலை தொடக்கி வைக்க ஹரியானா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! குறையப்போகுது வீட்டுமனை விலை! தமிழக அரசின் மெகா அறிவிப்பு.!
ஹைட்ரஜன் ரயில்
logo
Kalki Online
kalkionline.com