

ஜப்பான் நாட்டின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளலயுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய மகளிர் அணி 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனைப் படைத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கங்களை வேட்டையாடி வரும் இந்தியாவுக்கு, இன்று காலை மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் கும்கும் மோஹோத். மகளிர் தனிநபர் ரீகர்வ் வில்வித்தைப் பிரிவில் தென்கொரியா வீராங்கனை ஓ யே-ஜின்னை வீழ்த்தி தங்கத்தை வென்றார் இந்திய வீராங்கனை.
நேற்று (அக்டோபர் 2) இந்திய மகளிர் அணி ரீகர்வ் பிரிவில் தென்கொரியா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில் இன்று மகளிர் தனிநபர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
நேற்று தென்கொரியா அணியை வீழ்த்திய இந்திய அணியில் கும்கும் மோஹத்தும் முக்கிய பங்குண்டு. மகளிர் அணியில் தங்கம் வெல்ல உதவிய கும்கும் மோஹத், தனிநபர் பிரிவிலும் வென்றுள்ளார்
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை கும்கும் மோஹத், கடுமையாக போராடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த தென் கொரிய வீராங்கனை ஓ யே-ஜின்னை எதிர்கொண்டார்.
5 செட்களின் முடிவில் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளரை முடிவு செய்ய ‘ஷூட்-ஆஃப்’ முறைக்கு ஆட்டம் சென்றது. ஷூட்-ஆஃபில் கொரிய வீராங்கனை 8 புள்ளிகளைப் பெற்றார். 17 வயதே ஆன இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத் மிகத் துல்லியமாக அம்பை எய்து, 10 புள்ளிகளை அடித்து 6-5 என்ற புள்ளக் கணக்கில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில், தனிநபர் ரீகர்வ் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த சாதனை வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் தனிநபர் இடத்தையும் கும்கும் மோஹத் உறுதி செய்துள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக ஆசிய மற்றும் ஒலிம்பிக் அளவில் ரிகர்வ் வில்வித்தை பிரிவில் தென் கொரிய வீராங்கனைகளே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் ஒரே போட்டியில் 2 தென் கொரிய நட்சத்திரங்களை அடுத்தடுத்து வீழ்த்தி, கும்கும் மோஹோத் தங்கப் பதக்கம் வென்றது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்ன்ர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் இந்தியா பல தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக் பிரிவான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியா ஒரு தங்கம் கூட வென்றதில்லை என்ற நீண்டகால ஏக்கத்தை கும்கும் மோஹத் தீர்த்து வைத்துள்ளார்.
20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 77 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. சீனா 316 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜப்பான் 216 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், தென்கொரியா 134 பதக்கங்களுடன் 4வது இடத்திலும் உள்ளன.