

இன்று வியட்நாம் நாட்டில் சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 15 பேர் வரை பலியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது துயரமான செய்தியாக இருக்கிறது.
சமீப காலமாக இந்தியர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுலா பயணம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள். இந்தியப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, வியட்நாமில் உள்ள ஃபூ குவோக் தீவில் தான் இந்த பெரும் துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியர்களிடையே மிக பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
வியட்நாமின் ஹான் மே ரட் (Hon May Rut) என்ற தீவிலிருந்து, ஆன் தோய் (An Thoi) என்ற துறைமுகத்தை நோக்கி 36 பயணிகளைக் கொண்ட ஒரு அதிவேக படகு வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த அதிவேகப் படகில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 32 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களை தவிர மற்றவர்கள் படகில் பணியாற்றுபவர்கள். படகு வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது கரைக்கு அருகில் 400 மீட்டர் தொலைவில் திடீரென்று கடலில் ஏற்பட்ட ராட்சச அலைகளினால் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்து குறித்துத் உடனே தகவலறிந்த உள்ளூர் மீட்புக் குழுவினர் விரைவாக சம்பா இடத்தை கண்டறிந்து மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கினர். இதுவரை கிடைக்கப் பட்ட தகவல்களின் அடிப்படையில் படகில் பயணம் செய்தவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் துரதிர்ஷ்டவசமாக, 15 பேர் இந்த விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த 15 இந்தியர்களில் 8 பேர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள் என்ற நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.உயிரிழந்தவர்களில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு (வயது 44) மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் சிக்கியவர்கள் பிரபல 'லாவா' (Lava Mobile) மொபைல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. தங்களது நிறுவனத்தின் சிறந்த வணிக செயல்பாட்டிற்காக (Best Business Performance), செல்போன் கடை உரிமையாளர்கள், டீலர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் சிலரை லாவா மொபைல் நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அவ்வாறு இன்ப சுற்றுலா சென்றவர்களே இந்த கோர படகு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததே இந்த துயர் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனாலும் இந்த துயர சம்பவம் குறித்து வியட்நாம் கடற்கரையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்தியாவை சேர்ந்தவராக இருப்பதால் இந்திய தூதரகம் மீட்புப் பணிகள் மற்றும் தேவையான அடுத்த கட்ட உதவிகளை செய்வதற்கு முன் வந்துள்ளது.
இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களை பற்றிய தகவல்களை கண்டறிவதிலும் , உயிர் பிழைத்தவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவதிலும் வியட்நாம் மீட்பு படையுடன் தொடர்பில் இருந்து உதவி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரத்தில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அவசரகாலக் கட்டுப்பாட்டு அறைகள் உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளன.
வியட்நாம் படகு வைத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது தேவையான விவரங்களை அறிய இந்தியர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஹோ சி மின் நகர் கட்டுப்பாட்டு அறை: +84 36 2817930, +84 91 552 3714 மற்றும் +84 33 4520414.
ஹனோய் தூதரகக் கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165.
நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம், சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.