ரயில் பயணிகளே உஷார்! அக்டோபர் 31 வரை அதிரடி சோதனை... ஒரிஜினல் ID இல்லனா சிக்கல் தான்..!

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை நாடு தழுவிய அளவில் தீவிர டிக்கெட் பரிசோதனை நடவடிக்கையை மத்திய ரெயில்வே தொடங்கியுள்ளது.
டிக்கெட் பரிசோதகர்|ரெயில்வே
டிக்கெட் பரிசோதகர்|ரெயில்வேAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்திய ரெயில்வே பண்டிகைக் கால நெரிசலைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை நாடு தழுவிய அளவில் தீவிர டிக்கெட் பரிசோதனை நடவடிக்கையை (Ticket Checking Drive) மத்திய ரெயில்வே தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும், 13,000 பயணியர் ரெயில்களில், தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, ரெயில்வே சட்டம் 1989ன் படி, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போத அது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முறை டிக்கெட் பரிசோதகர் (TTE) உங்கள் டிக்கெட்டை மட்டும் பார்த்துவிட்டுச் செல்லாமல், உங்கள் அசல் அடையாள அட்டையையும் (original ID) கேட்பார். எனவே ரெயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது அசல் அடையாள அட்டை (Original ID Proof) வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:

ரெயில் பயணிகளிடையே சோதனைகள் எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டாலும், ரெயில்வே நிர்வாகம் முக்கியமாகப் பின்வரும் 4 வகையான பயணிகளின் மீது கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளது.

* நீங்கள் ஒரே டிக்கெட்டில் குடும்பமாகவோ (Group Booking Rule) அல்லது நண்பர்களுடனோ (Shared Ticket) பயணம் செய்தால், அந்த டிக்கெட்டில் உள்ளவர்களில் குறைந்தது ஒருவராவது தனது அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். டிக்கெட்டில் உள்ள யாரிடமும் அசல் அடையாள அட்டை இல்லை எனில், அந்த டிக்கெட்டில் பயணிக்கும் அனைவரும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாகக் (Ticketless Travelers) கருதப்படுவார்கள்.

* மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் (Concessions & Quotas) டிக்கெட் பதிவு செய்தவர்கள், தங்களின் சலுகைக்கான தகுதியை நிரூபிக்கும் அசல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

டிக்கெட் பரிசோதகர்
டிக்கெட் பரிசோதகர்AI image

அதாவது, சலுகை அல்லது சிறப்பு முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அந்த ஒதுக்கீடு அல்லது தள்ளுபடிக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை TTE சரிபார்ப்பார். அதற்கான தகுதிச் சான்றை நீங்கள் காட்ட வேண்டியிருக்கும்.

* ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் e-Pass அல்லது PTO மூலம் பயணிக்கும் போது, அதை முறையான பயண அதிகாரப்பூர்வ ஆவணமாக (Authority to travel) மாற்றியிருக்க வேண்டும் மற்றும் அசல் ஐடியையும் வைத்திருக்க வேண்டும்.

* அதுமட்டுமின்றி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளும் (Unreserved) கண்காணிக்கப்படும். உங்களிடம் உள்ள டிக்கெட் குறித்து டிக்கெட் பரிசோதகருக்குச் சிறு சந்தேகம் எழுந்தாலும் அவர்கள் உடனடியாகத் தங்கள் TTE செயலி (App) மூலம் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உஷார்! ரெயில் நிலையங்களில் குப்பையை வீசினால் இனி 1,000 ரூபாய் ஃபைன்!
டிக்கெட் பரிசோதகர்|ரெயில்வே

ஏற்றுக்கொள்ளப்படும் அசல் அடையாள அட்டைகள் (Original IDs):

டிஜிலாக்கரின் (DigiLocker) ‘Issued Documents’ பகுதியில் உள்ள ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்கலாம். ஆனால் வெறும் போட்டோவாகவோ, ஸ்கேன் செய்த நகலாகவோ காண்பித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

பயணத்தின் போது கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை அசலாக வைத்திருக்க வேண்டும்:

ஆதார் அட்டை (Aadhaar Card)

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

பான் கார்டு (PAN Card)

ஓட்டுநர் உரிமம் (Driving Licence)

பாஸ்போர்ட் (Passport)

அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/கல்லூரி அடையாள அட்டை

புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம்

அபராதம் எவ்வளவு?

சமீபத்திய ரெயில்வே சட்டத் திருத்தத்தின்படி (Jan Vishwas Act, 2026), டிக்கெட் இல்லாமல் அல்லது முறையான ஐடி இல்லாமல் பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையுடன் சேர்த்து பயணத்திற்கான கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும்.

இந்த மாத தொடக்கத்தில் வெளியான ரெயில்வே புள்ளிவிவரங்களின்படி, மத்திய ரெயில்வே ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத்தில், டிக்கெட் இல்லாமலோ அல்லது முறையற்ற வகையிலோ பயணம் செய்த 18.03 லட்சம் வழக்குகளைக் கண்டறிந்து, ரூ. 140.81 கோடியை வசூலித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ரெயில் டிக்கெட் முன்பதிவு: ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் செலுத்தினால் கூடுதல் கட்டணமா?
டிக்கெட் பரிசோதகர்|ரெயில்வே

எனவே, உங்களுடைய ரெயில் பயணங்களின் போது தேவையற்ற அலைச்சலையும் அபராதத்தையும் தவிர்க்க மறக்காமல் ஏதேனும் ஓர் அசல் அடையாள அட்டையைக் கையில் வைத்திருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com