மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி ஹோட்டல்களில் தோசை, டீ கிடையாது..!

இன்று அல்லது நாளை முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
gas
gas
Published on

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் பதற்றங்களால் இந்தியாவிலும் வர்த்தக ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்த போர் பதற்றம், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளதுடன் தற்போது சமையல் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது.

போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதால் பெங்களூருவில் நேற்று முதல் உணவகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் விலை உங்களை பயமுறுத்துகிறதா? இதைச் செய்தால் ஒரு மாதம் கூட வரும்!
gas

சாதாரண நாட்களில் ஒரு ஹோட்டலுக்குத் தினசரி 1 முதல் 2 சிலிண்டர்கள் தேவைப்படும். விசேஷ ஆர்டர்கள் இருந்தால் 5 முதல் 7 சிலிண்டர்கள் வரை தேவைப்படும். தற்போது சிலிண்டர் கிடைக்காததால் பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பைப் பயன்படுத்த நினைத்தாலும், விறகின் விலை கிலோவிற்கு ரூ.5-லிருந்து ரூ.7-ஆக உயர்ந்துவிட்டது. மேலும், நகர்ப்புறங்களில் புகை காரணமாக விறகு அடுப்பு பயன்படுத்த அனுமதி கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் கூட இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை என ஹோட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.

பல முன்னணி ஓட்டல்களிலும் ஒருநாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்று அல்லது நாளை முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவகங்களில் போதிய அளவில் சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளன. மாதந்தோறும் 2,885 சிலிண்டர்கள் தேவைப்படும். இப்போது 960 சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதால் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
புதிய வசதி..! இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை எளிதில் மாற்ற முடியும்..!
gas

இந்த நிலையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள உணவகங்களில் சில மூடப்படுவதாகவும், சில உணவகங்கள் உணவுப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சைனீஸ், வடஇந்திய உணவுகள் தயாரிக்கப்பட மாட்டாது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அடுப்புகள் தொடர்ந்து எரியும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளான சைனீஸ், வட இந்திய துரித உணவுகள், தோசை உள்ளிட்டவை இனி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இட்லி, சப்பாத்தி கலவை சாதம் உள்ளிட்ட உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே இந்த விற்பனையும் இருக்கும் என்றும் மதியம் 2 மணி நேரம், இரவு 2 மணி நேரம் என விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதற்கிடையே சிலிண்டர் கிடைத்தால் மட்டுமே இன்று உணவகம் செயல்படும் என்றும் சில உணவகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்தில், பல்வேறு வகையான டிபன் மற்றும் அரிசி உணவு வகைகள் வழங்கப்படாது என ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது. சப்பாத்தி மற்றும் தோசை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலவை சாதங்கள் வழங்கப்படும் என்றும் வாரத்தில் இருமுறை அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த பல ஹோட்டல்களில், உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. தோசை, ஆம்லெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தோசை அல்லது ஆம்லெட் போடுவதற்கு, தோசைக்கல்லை அதிக தீயில் வைக்க வேண்டும். இதற்கு எரிவாயு அதிகமாக தேவைப்படும். இதனால், கோயம்புத்தூரில் இருக்கும் சில உணவகங்கள், தோசை மற்றும் ஆம்லெட் வேண்டாமென முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் 100 வகையான உணவுகள் மட்டுமே விற்கப்படும் என்றும் காளிஃபிளவர் ரோஸ்ட், தந்தூரி போன்ற உணவுகளுக்கு கேஸ் செலவாகும் என்பதால், அதன் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். பிற அத்தியாவசிய தேவைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என பாரத் பெட்ரோலியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?... இதை மட்டும் பண்ணுங்க! உடனே உங்க மானியம் வரும்..!
gas

ஹோட்டல்களை மூடுவதால் உரிமையாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் உணவகங்களில் வேலைசெய்யும் தமிழக மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்பட சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com