
மருத்துவர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்படுகின்றனர். ஏனெனில் கடவுளால் உயிரை உருவாக்க முடியும் என்றால் மருத்துவர்களால் அந்த உயிரை காப்பாற்ற முடியும் என்பதால் கடவுளுக்கு நிகராக மருத்துவர்கள் கருதப்படுகின்றனர். வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள் நாடு முழுவதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் இதயநோய்க்கு சிறந்த மருத்துவர் என்றால் அது டாக்டர் கே.எம்.செரியன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
இதயநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை உயிர் பிழைக்க வைத்துள்ளார். இவர் அம்பத்தூரில் பிராண்டியர் லைப்-லைன் மருத்துவமனையை நிறுவி இதயநோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானேரை காப்பாற்றி உள்ளார். இதுமட்டுமில்லாமல் பல்வேறு தொண்டுகளையும் செய்துள்ளார்.
டாக்டர் கே.எம்.செரியன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் கோட்டுரத்து மம்மன் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் போற்றப்படுகிறார். 82 வயதான இவர் பெங்களூருவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமைனையில் உயிரிழந்தார்.
இவரது மகன் டாக்டர் சஞ்சய் செரியன் துபாயில் உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளதால் அவர்கள் வர தாமதமாகும் என்பதால் டாக்டர் கே.எம்.செரியன் உடல் 3, 4 நாட்களுக்கு பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது டாக்டர் கே.எம்.செரியன் உடல் அம்பத்தூரில் உள்ள பிராண்டியர் லைப்லைன் மருத்துவனை பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் கே.எம்.செரியன் இந்தியாவின் முதல் இதய அறுவை சிகிச்சையை 1975-ல் சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்தார். அதேபோல் இவர் நாட்டின் முதல் இதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நாட்டின் முதல் குழந்தை இதய அறுவை சிகிச்சையையும் செய்து சாதனை படைத்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு 1991-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது. இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சைத் துறையில் செய்த பங்களிப்புகளுக்காக 2000-ம்ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். மேலும் 2010-ம் ஆண்டில், கார்டியோ தொராசிக் சர்ஜன்களின் உலக சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் செரியன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”நம் நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம்.செரியன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. இதய மருத்துவத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது, பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டும், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான அவரது முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கிறது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன“ என்று தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டாக்டர் கே.எம்.செரியனின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே.சசிகலா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.