
சர்வதேச யோகா தினம் இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 11-வது ஆண்டாக இந்த முறையும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் அன்று, யோகாவின் நன்மைகள் குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருளாக ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே. கடற்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பதற்கு வசதியாக 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் தலா 1,000 பேர் பங்கேற்று பயிற்சியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்காக 3.32 லட்சம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 25,000 பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று 108 நிமிடங்கள் சூரியநமஸ்காரம் செய்து அசத்தினர். ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்த சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 6:30 மணிக்கு தொடங்கிய கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சி காலை 8 மணி வரை (1.30 மணிநேரம்) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து யோகா பயிற்சிகளை செய்தார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பயிற்சி செய்தனர்.
பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யோகா பயிற்சி நடைபெறும் பகுதியை கண்காணிக்கும் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் மற்றும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.