வாழ்வில் ஒருமுறை காசி போகணுமா? IRCTC-யின் 9 நாள் ஆன்மீக சுற்றுலா..!!

ஐஆர்சிடிசி சார்பில், 9 நாட்கள் கொண்ட ‘காசி தீர்த்த யாத்திரை’ பாரத் கவுரவ் ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் செப்டம்பர் 9 முதல் இயக்கப்பட உள்ளது.
காசி யாத்திரை
காசி யாத்திரைimage credit-indianexpress.com, tusktravel.com
Updated on

இந்திய ரெயில்வே உணவுவகம் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி - RCTC) தெற்கு மண்டலம் சார்பில், கயா, காசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் 9 நாட்கள் கொண்ட ‘காசி தீர்த்த யாத்திரை’ பாரத் கவுரவ் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

காசிக்கு புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு தென்காசியில் இருந்து காசி வரை இயக்கப்படும் சிறப்பு சுற்றுலா ரெயில் மூலம் காசி, அயோத்தி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஐஆர்சிடிசி(IRCTC) அறிவித்துள்ளது. இந்த யாத்திரை மேற்கொள்ள பயண விவரங்கள், கட்டணம், வசதிகள் மற்றும் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். `கடமையை முடித்தால் காசிப்பயணம்' என்ற சொலவடையே இதனால்தான் வந்தது.

காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன.

‘காசியாத்திரை’ என்பது ராமேஸ்வரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். அதாவது தென்னிந்தியர்களின் பாரம்பரிய காசி தீர்த்த யாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கி, பிரயாகை (திரிவேணி சங்கமம்) மற்றும் கயா வழியாகக் காசிக்குச் சென்று, மீண்டும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். இது பித்ரு கடன் தீர்க்கவும், பாவங்கள் நீங்கவும் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய ஆன்மிகப் பயணமாகும். இன்றைக்கு போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட நிலையில், ஒவ்வொருவரும் காசியாத்திரையை மேற்கொள்ள வேண்டும்' என்று காசி யாத்திரையின் மகத்துவம் பற்றி காஞ்சி பெரியவர் அருளியிருக்கிறார்.

யாத்திரை செல்லும் முறை (க்ரமம்)

யாத்திரையைத் தொடங்கும் முன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, அங்குள்ள மணலை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்த மணலைக் கரைத்து, முன்னோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டும்.

மறைந்த முன்னோர்களுக்கு பிண்ட தானம் (திதி) அளிக்கும் மிக முக்கிய தலம்.

புனித கங்கை நதியில் நீராடி, காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணி தாயாரை வழிபட வேண்டும். இறுதியாக, கங்கைக் கரையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தமிழகக் கோவில்களில் மறைந்திருக்கும் இந்த ஆன்மீக ரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா?
காசி யாத்திரை

காசியில் தீர்த்தம் (புனித நீர்) எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் அல்லது தீர்த்தத்தை ராமேஸ்வரம் கடலில் சேர்த்து யாத்திரையை முடிக்கும் போது தான் நம் காசியாத்திரை பரிபூரணமாக நிறைவடையும்.

இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புனித பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் புனித ஸ்தலங்களில், முக்தி தரும் ஸ்தலங்களில் ஒன்றான காசிக்கு ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்களுக்கு IRCTC மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ரெயில்வே (IRCTC) சென்னை, திருநெல்வேலி மற்றும் மதுரை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அவ்வப்போது சிறப்பு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரெயில்களை இயக்குகிறது.

காசி யாத்திரை
Kasi YatraAI Image

இந்த முறை தமிழக பக்தர்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘காசி தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் ஒரு ஆன்மீகச் சுற்றுலாத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் (Bharat Gaurav Special Train) மூலம் தமிழகத்தின் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, மற்றும் சென்னை வழியாக, முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் கயா, காசி (வாரணாசி), பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி உள்ளிட்ட முக்கிய புனித தலங்களுக்கு ஆன்மிக தரிசன பயணம் மேற்கொள்ளலாம். தங்குமிடம், உணவு, உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நாட்கள் சிறப்பு ஆன்மீக யாத்திரை, சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்கும். இது குறித்த முழு விவரங்கள் இங்கே.

காசி யாத்திரை ஆன்மீக சுற்றுலா விவரம் :

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த புனித ஆன்மிக சுற்றுலா பயணம் மொத்தம் 8 இரவுகள் மற்றும் 9 நாட்கள் கொண்ட சுற்றுலா திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

புறப்படும் தேதி: வரும் செப்டம்பர் 9-ம்தேதி (புதன்கிழமை) திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை வழியாக இயக்கப்படும்.

திரும்பும் தேதி: செப்டம்பர் 15-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) வட இந்தியாவிலிருந்து கிளம்பி, செப்டம்பர் 17-ம்தேதி (வியாழக்கிழமை) மீண்டும் திருநெல்வேலி வந்தடையும்.

இதையும் படியுங்கள்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு!
காசி யாத்திரை

Bharat Gaurav Train: இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டும் வகையில், இந்திய ரெயில்வேயால் பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில்கள் (Bharat Gaurav) இயக்கப்படுகின்றன.

முழுமையான ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய இந்த ரெயில்களில், உணவு, தங்குமிடம் மற்றும் வழிகாட்டுதல் வசதிகள் அனைத்தும் கட்டணத்தில் அடங்கும்.

காசிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில், பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் (SZBG43) நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காசி, கயா, அயோத்தி, ராமேஸ்வரம் போன்ற முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கும், காஷ்மீர், கோவா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நீண்ட தூர பயணத்தை வசதியாகவும் அனுபவிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரெயிலில் 1 ஏ.சி. 2-டியர் கோச், 7 ஏ.சி. 3-டியர் கோச்சுகள், 3 ஸ்லீப்பர் வகுப்பு கோச்சுகள், 1 பேண்ட்ரி கார் (சமையல் வசதி), 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்கள், நவீன சமையலறை, சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம் ஆன்மீக சுற்றுலா திட்டம் தொடக்கம்... எப்படி புக் செய்யவேண்டும்?
காசி யாத்திரை

இதன் மூலம் பல்வேறு வசதிகளுக்கு ஏற்ப பக்தர்கள் தங்களுக்குப் பொருத்தமான வகுப்பில் பயணிக்க முடியும் என்பதால் ஆண்டுதோறும் இந்த ரெயிலில் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com