

இந்திய ரெயில்களில் பயணம் செய்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. குடும்பங்களுடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பயணங்களுக்கு எப்போதும் ரெயில் பயணம் ஏதுவாக இருக்கும். சக ரெயில் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாகவும், பாதுகாப்பிற்காகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரெயில்வே புதிய வசதிகளையும், விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த விதிகள் தெரியாமல் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யவும் முடியாது மற்றும் ரெயிலில் பயணம் செய்தால் உங்கள் மேல் வழக்கு போடவும் வாய்ப்புகள் உள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
விதிமுறைகள்
* மின்சாரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கும் கெட்டில் (Kettle) இனிமேல் ரெயிலில் எடுத்துச்செல்ல முடியாது. ஏனெனில் இதனால் தீவிபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி எடுத்துச்சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். அல்லது ஜெயில் தண்டணை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
* ரெயில் பயணத்தின் போது இரவு 10 மணிக்கு மேல் ஹெட்ஃபோன் இல்லாமல் சத்தமாகப் பாட்டு கேட்பது, போனில் பேசுவது, அல்லது ரீல்ஸ் பார்ப்பது போன்ற மற்ற பயணிகளின் தூக்கம் மற்றும் அமைதிக்கு இடையூறு செய்யும் செயல்களை செய்தால் அபராதம் விதிக்கப்படலாம். ரெயில்வே சட்டத்தின் பிரிவு 145-ன் கீழ், இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். இரவில் பத்து மணிக்கு மேல் மின்விளக்குகளை எரியவிடவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
* ரெயில் நிலையத்தில் அனுமதி வாங்காமல் ரீஸ் எடுக்கவும், Content எடுக்கவும், vlog எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. முறையாக அனுமதி வாங்காமல் வீடியோ எடுத்தால் உங்களுடைய Contentஐ டெலிட் செய்யப்படும். இதையே நீங்கள் மறுபடியும் வாடிக்கையாக செய்து கொண்டிருந்தால் உங்களுடைய யூடியூப் சேனலை தடை செய்வதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
* IRCTC மூலம் ரெயிலில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம். IRCTC மூலம் நீங்கள் தட்கலில் டிக்கெட் எடுக்க ஆதாருடன் லிக் செய்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் தட்கலுக்கு மட்டுமல்ல சாதாரணமாக டிக்கெட் புக் செய்வதாக இருந்தாலும் IRCTC உடன் ஆதார் கார்டை லிங் செய்து வைத்திருந்தால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். ஆதார் OTP சரிபார்ப்பு இல்லாமல் தட்கல் டிக்கெட் கிடைக்காது.
* நீங்கள் Offline மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்வதாக இருந்தால் ரெயில் நிலையத்திற்கு சென்று தட்கல் முன்பதிவு கவுண்டரில் வரிசையில் நிற்கவும். அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் குறிப்பிடவும். உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ கவுண்டரில் தெரிவிக்க வேண்டும். OTP சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு டிக்கெட் வழங்கப்படும். நிறைய பேர் இவ்வாறு டிக்கெட் எடுத்து அதிக விலைக்கு விற்பதால் தான் இந்த OTP நடைமுறையை சதன் ரெயில்வே கொண்டு வந்துள்ளது.
* ரெயில் பயணிகளுக்கு இந்திய ரெயில்வேயின் IRCTC இணையதளம்/செயலி வழியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வெறும் 45 பைசா பிரீமியத்தில் ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்கும் விருப்பத் தேர்வு திட்டம் உள்ளது. ஆன்லைனில் IRCTC மூலம் உறுதி செய்யப்பட்ட (Confirmed) E-டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே (AC, Sleeper, 3AC, 2AC போன்ற அனைத்து ரிசர்வ் வகுப்புகளுக்கும்) இந்த சலுகை வழங்கப்படும். பயணம் தொடங்குவதற்கு முன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் காப்பீட்டுப் பலன்கள் கிடைக்காது, கவரேஜ் நிறுத்தப்படும்.
* முன்பெல்லாம் ரெயில் டிக்கெட் எடுத்தால் அதை மாற்ற முடியாது. கேன்சல் செய்யலாம் அல்லது புதிதாக புக் செய்யலாம். ஆனால் தற்போது பயணம் செய்ய உள்ள டிக்கெட் தேதியை மாற்றி கொள்ள முடியும். இருக்கை காலியாக இருந்தால், மாற்றம் சாத்தியமாகும். புதிய தேதியில் இருக்கை காலியாக இல்லையென்றால், பழைய நடைமுறையைப் போல டிக்கெட்டை ரத்து செய்துவிட்டுப் புதிய டிக்கெட் எடுக்க வேண்டும். தேதி மாற்றும்போது கட்டண வித்தியாசம் இருந்தால், அதைச் செலுத்த வேண்டும்.
அதுவும் சாட் தயார் செய்வதற்கு முன்பாக தான் மாற்ற முடியும். அதில் மற்றொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது, டிக்கெட்டில் பெயர் மாற்ற வேண்டுமானால் ரத்த சம்பந்தம் உள்ளவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு ரத்த உறவு என்பதற்கு ஆதாரமும், கைப்பட எழுதிய கடிதமும் தரவேண்டும். இதையெல்லாம் செய்து கொடுத்தால் தான் உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை உங்கள் ரத்த உறவுக்கு மாற்றி கொடுக்க முடியும்.
* இந்திய ரெயில்வேயில், முன்பெல்லாம் ரெயில் கிளம்புவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு தான் சாட் தயாராகி, உங்களது டிக்கெட் கன்பார்ம் ஆனதா இல்லையா என்பது தெரியும். ஆனால் தற்போது வெயிட்டிங் லிஸ்ட் (WL) அல்லது RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள், ரெயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் டிக்கெட் உறுதிசெய்யப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க முடியும்; இதன்மூலம் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால், பயணிகள் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய அதிக நேரம் கிடைக்கும்.
* தற்போது ரெயில் டிக்கெட்டின் விலையை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிமீட்டர் மற்றும் நீங்கள் எந்த கோச்சில் பயணம் செய்றீங்க என்பதை பொறுத்து தான் இந்த டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 215 கிமீ மேல் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வகுப்பில் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி மற்றும் மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில்களின் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பைசா, 2 பைசா எல்லாம் ஒரு பெரிய விலை ஏற்றமா என்று நினைக்கலாம். ஆனால் இந்த ஒரு பைசா, 2 பைசா ஏற்றியதாலேயே சதன் ரெயில்வேக்கு கிட்டத்தட்ட ரூ.600 கோடி வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது.
* ரெயில் நிலையங்களில் உணவுப் பொருட்களின் தரம், விலை, சுகாதாரம் குறித்து, QR Code-ஐ ஸ்கேன் செய்து புகார் தெரிவிக்கும் வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் ஒட்டப்பட்டிருக்கும் QR Codeஐ உங்கள் மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்தவுடன், இந்திய ரெயில்வேயின் Rail Madad புகார் தளம் வரும்.
அதில் உணவுத் தரம், விலை, சுகாதாரம், சேவை குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் குறித்து தெளிவாகப் புகாரளிக்கலாம். தற்போது இந்த QR Code சிஸ்டம் சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ஊர்களிலும் நடைமுறைப்படுத்த உள்ளது.
* தெற்கு ரெயில்வேயின் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் கட்டண அடிப்படையில் பயணிகளுக்கு தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தலையணை மட்டும் ₹30, பெட்ஷீட் மட்டும் ₹20, தலையணை உறையுடன் கூடிய பெட்ஷீட் ₹50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி கோட்சில் மட்டுமே இந்த நடைமுறை இருந்து வந்தநிலையில் தற்போது ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் தரப்போகிறார்கள். இந்தியாவிலேயே சென்னையில் மட்டும் தான் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட 10 ரெயில்களில் மட்டும் தான் வந்துள்ளது.
* ரெயிலில் அதிக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்கள், அனுமதிக்கப்பட்ட இலவச எடை வரம்பை மீறினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்லீப்பர் வகுப்புக்கு 40 கிலோ, இரண்டாம் வகுப்புக்கு 35 கிலோ, ஏசி வகுப்புகளுக்கு 70 கிலோ வரை (வகுப்பு வாரியாக மாறுபடும்) இலவசம். இலவச வரம்பை மீறினால், கூடுதல் எடைக்கு 1.5 மடங்கு பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், முன்பதிவு செய்யப்படாத அதிகப்படியான லக்கேஜுக்கு, பார்சல் கட்டணத்தை விட 6 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.