

பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது சட்டச் சிக்கல்கள், உரிமைப் போராட்டங்கள் மற்றும் வருங்காலத்தில் வீடு கட்டும் தடைகளை ஏற்படுத்தி, உங்கள் ஆயுள் கால சேமிப்பை இழக்கச் செய்யும் என்பதால், அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தமிழகத்தை பொறுத்தவரை பட்டா என்பது நிலம் விற்பவருக்குத்தான் சொந்தமானது என்பதற்கான அரசின் அதிகாரப்பூர்வ சான்றாகும், இதுவே உங்கள் சொத்து பாதுகாப்பிற்கு முக்கியமானது. எதிர்காலத்தில் உங்கள் சொத்தை உரிமை கோர நினைத்தால், பட்டா உங்கள் உரிமையைப் பாதுகாக்கும். எனவே பட்டா இல்லாத ஒரு நிலத்தை வாங்குவது வீணானது.
வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் பட்டாவில் ஒரு நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது, அதன் சர்வே எண் என்ன, பரப்பளவு மற்றும் எல்லைகள் என்ன என்பது போன்ற அனைத்து விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய பட்டா ஒரு முக்கியமான ஆதாரமாக கருதப்படுப்படுவதால் தான் ஒருவர் நிலம் வாங்கும் போது முதலில் பார்க்க வேண்டிய ஆவணங்களில் பட்டா முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அதேசமயம், பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது முற்றிலும் சட்டவிரோதம் என்றும் சொல்ல முடியாது.
சில நேரங்களில் புதியதாக பிரிக்கப்பட்ட நிலங்கள், விவசாய நிலங்கள் அல்லது கிராம நாதம் நிலங்கள் போன்றவற்றிற்கு ஆரம்பத்தில் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்காமல் இருக்கலாம்.. அத்தகைய சூழலில் விற்பனை பத்திரம் முதன்மை உரிமை ஆவணமாக இருக்கும். ஆனால் அந்த நிலத்திற்கு பின்னர் பட்டா பெற முடியுமா, அந்த நிலத்தின் உரிமை தெளிவாக உள்ளதா என்பதை மிகவும் கவனமாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம்..
பட்டா இல்லாத நிலங்களை வாங்குவதில் இருக்கும் மிக முக்கியமான ஆபத்து அரசு நில ஆக்கிரமிப்பாகும். அதாவது பட்டா இல்லாத நிலம், பெரும்பாலும் அரசு நிலம் (புறம்போக்கு), மேய்ச்சல் நிலம் அல்லது நீர்நிலை ஆக்கிரமிப்பாக இருக்கலாம்.
இந்த நிலங்களை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயல்வார்கள். ஏனெனில், இத்தகைய நிலங்களுக்கு ஒருபோதும் பட்டா கிடைக்காது என்பது தான். தற்போது அதிகளவில் இதுபோன்ற மோசடிகள் நடந்தேறி வருகிறது.
இது தெரியாமல் நீங்கள் அந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய பிறகு, அரசு அந்த நிலத்தை மீட்க முயன்றால், எந்த இழப்பீடும் இல்லாமல் நீங்கள் அந்த நிலத்தை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதால் நிலம் வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
பட்டா இல்லாத இடத்தை வாங்குவதால் நேரும் பிரச்சனைகள்?
வங்கிகள் பொதுவாக பட்டா, சிட்டா போன்ற வருவாய் பதிவுகளை வைத்து தான் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்துவதால், பட்டா இல்லாத நிலங்களுக்கு வங்கிகளில் கடன் பெறுவதும் மிகவும் கடினம். எனவே தான் பட்டா இல்லாத நிலத்தில் முதலீடு செய்தால், பிற்காலத்தில் வங்கிகளில் வீடு கட்ட கடன் பெற முடியாமல் சிக்கல் ஏற்படலாம். மேலும் நீங்கள் வாங்கிய நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கும், வீடு கட்டுவதற்கான DTCP அல்லது CMDA அனுமதி பெறுவதற்கும் பட்டா மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய மற்றொரு சிக்கல் என்னவென்றால், அந்த நிலம் ஏற்கனவே பலருக்கு விற்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. பட்டா இருந்தால் தற்போதைய உரிமையாளர் யார் என்பதை ஆன்லைன் பதிவுகள் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் கூட்டுப்பட்டா உள்ள நிலத்தில்,வாரிசுதாரர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் வாய்ப்புள்ளதால், பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் சொத்துத் தகராறு ஏற்படும்.
நிலத்தின் உரிமையாளர் யார் என்று பட்டாவில் மட்டுமே இருக்கும். அப்படி அந்த பட்டாவே இல்லாத பட்சத்தில் யார் வேண்டுமானாலும் இடத்தை உரிமை கொண்டாட வருவார்கள்.
ஒரு இடத்தை பட்டா இல்லாமல் வாங்கிய பிறகு அந்த இடத்துக்காரரே உங்களிடம் பிரச்சனை செய்ய வாய்ப்பு உள்ளது. இப்படி செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக போராடி பெற வேண்டியது இருக்கும்.
நீங்கள் பட்டா இல்லாத இடத்தை வாங்கிய பின்னர், அதனை விற்க நினைக்கும்போது உங்களால் சுலபமாக விற்க முடியாது. ஏனெனில், வாங்குபவர்களும் பட்டா இல்லாத நிலத்தை வாங்குவதில் தயக்கம் காட்டுவார்கள்.
எனவே குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக ஆராயாமல் எக்காரணத்தை கொண்டும் பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவு கிடையாது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நீங்கள் ஒரு நிலத்தை வாங்குவதாக இருந்தால் முதலில் அந்த நிலத்திற்கான வில்லங்கச் சான்றிதழ், பழைய பத்திரங்கள், நிலத்தின் வரலாறு மற்றும் பட்டா நிலை போன்றவற்றை முழுமையாகச் சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை மறந்து விடவேண்டாம். நிலத்திற்கான விற்பனை பத்திரம் (Sale Deed) இருந்தாலும், பட்டா இல்லாவிடில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), வட்டாட்சியர் அலுவலகம் அல்லது வழக்கறிஞரை அணுகி, அந்த நிலம் உண்மையில் யாருடையது என்பதையும், அது அரசு நிலம் அல்ல என்பதையும் உறுதி செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.
நிலம் வாங்குவது உங்கள் வாழ்நாள் கனவு என்றாலும் அதை சரியாகச் செய்ய பட்டா மற்றும் பத்திரங்களைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.