

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் இன்னும் படம் வெளியாகவில்லை.
விரைந்து தணிக்கை சான்றிதழை வழங்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றத்தில் சுமுகமான முடிவு கிடைக்கவில்லை. ஆகையால் படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு (RC) அனுப்பினால் மட்டுமே, விரைந்து வெளியிட முடியும் என்பதை உணர்ந்து, மறுதணிக்கைக்கு அனுப்பத் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இதன்படி இன்று (மார்ச் 9) ஜனநாயகன் திரைப்படம் மறுதாணிக்கை செய்யப்படவுள்ளது. இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டால், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மறுதணிக்கையிலும் சான்றிதழ் கிடைக்க தாமதமானால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். திரைப்படம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் மற்றும் மமீதா பைஜூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தால் படம் இன்று வரையிலும் வெளியாகாமல் இருப்பது, விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருப்பினும் தற்போது மறுதணிக்கை செய்யப்பட இருப்பதால், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். மறுதணிக்கையில் ஜனநாயகன் படத்திற்கு பல்வேறு இடங்களில் கட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தணிக்கை வாரியம் கட் செய்ய சொல்லும் இடங்களில் எல்லாம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ப்ரோமோஷன் செய்யப்பட்டு, படம் வெளியாக ஒரு மாத காலம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
இன்று நடக்கும் மறுதணிக்கையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டால், மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், இதற்குப் பின் ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்குப் பிறகே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியீட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, இன்றைய நாள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் மறு ஆய்வுக் குழுவின் பார்வையில் ஜனநாயகன் படம் உள்ளது.
பெரும்பாலும் U/A சான்றிதழ் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சான்றிதழ் கிடைத்தால் தான் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
மேலும் விடுமுறை தினத்தை மையமாக வைத்து தான் படம் வெளியாகும் என்பதால், அடுத்து வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு (ஏப்ரல் 14) படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் சிலர் கருதுகின்றனர்