

சினிமா வாழ்வைத் துறந்து விட்டு, தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கரூர் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு, தற்போது ஈரோட்டில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
ஈரோடு கூட்டத்திற்குப் பிறகு விஜய் அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முழு காரணமே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தான். தவெக-வில் செங்கோட்டையன் இணைந்த பிறகு அக்கட்சியின் செயல்பாடுகள் முழு வீச்சில் வேகம் எடுத்துள்ளன.
50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் வரவு, தவெக-விற்கு அதிக பலத்தை சேர்த்துள்ளது. அதிமுகவில் இருந்தபோது ஜெயலலிதாவின் பயணத் திட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் செங்கோட்டையன் தான்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பயணத் திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த அனைத்து பொறுப்புகளும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விஜயின் நம்பிக்கைக்கு ஏற்ப செங்கோட்டையனும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளார்.
சொந்த மாவட்டமான ஈரோட்டில் இந்த வாரம் மக்கள் சந்திப்பை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளார் செங்கோட்டையன். இவரது வரவுக்கு முன்பு தவெக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையனின் வரவுக்குப் பிறகு ‘தவெக தலைமையில் தான் கூட்டணி’ என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை உருவாக்கியுள்ளது தவெக. இந்தக் குழுவில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனால் மற்ற கட்சித் தலைவர்களை மிக எளிதாக அணுக முடியும் என விஜய் நம்புகிறார். இந்நிலையில் இன்னும் கூட்டணியில் இணையாத பாமக தேமுதிக, அமமுக மற்றும்புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை மேற்கொள்ள இருக்கிறார் செங்கோட்டையன்.
ஜனவரி மாதத்திற்குள் தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். கடந்த ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை முதல்வர் ஆக்குவேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்திற்கு சின்னம் ஒதுக்கப்பட உள்ளது. தவெக-விற்கு மோதிரம் அல்லது விசில் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சின்னம் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
கூட்டணி முடிவான பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் தவெக நேரடியாக களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து, அதில் ஒருவரை இறுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்க தவெக திட்டமிட்டுள்ளது.
அரசியல் களத்தில் முழு வீச்சுடன் செயல்பட்டு வரும் விஜய் அடுத்ததாக சேலத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவிருக்கிறார் இதற்காக காவல்துறையினிடம் தவெக சார்பில் அனுமதி கூறப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தவெக முன்னணி கட்சிகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.