

பென்ஷன் பெரும் மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் தான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படும்.
மொபைல் செயலி, அஞ்சல் துறை மற்றும் வங்கிகள் வாயிலாக வாழ்நாள் சான்றிதழை மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்க முடியும். இதில் மொபைல் செயலி முறையைத் தேர்ந்தெடுத்தால், முக அங்கீகாரத்தை உறுதி செய்ய தெளிவான புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
ஒருவேளை ஜீவன் பிரமாண் செயலியில் புகைப்படம் நிராகரிக்கப்பட்டால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் எளிதாக சரிசெய்து விடலாம்.
1. முக அமைப்பு மற்றும் கேமரா நிலை:
* ஸ்கேன் செய்யும் போது மொபைல் கேமராவை முகத்திற்கு நேராக, கண் மட்டத்தில் வைக்க வேண்டும்.
* மொபைல் கேமராவிற்கும், முகத்திற்கும் இடையே 1.5 முதல் 2 அடி வரையிலான தூரம் இருப்பது நல்லது.
* செயலியில், கேட்கும் போது மட்டும் சரியான நேரத்தில் இயல்பாக கண்களை சிமிட்ட வேண்டும். கண்களை சிமிட்டும் போதும், ஸ்கேன் செய்யும் போதும் முகம் அசைவற்ற நிலையில் இருத்தல் வேண்டும்.
* தலையில் தொப்பி அல்லது முகத்தை மறைக்கும் வகையில் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு ஸ்கேன் செய்யுங்கள்.
2. நல்ல வெளிச்சம் மற்றும் பின்னணியை சரிசெய்தல்:
* புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சம் உங்களின் முதுகுக்குப் பின்னால் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் புகைப்படத்தில் முகம் இருட்டாகத் தெரியும்.
* முகத்தின் மீது சீரான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யுங்கள். புகைப்படம் எடுக்கும் போது முகத்தில் நிழல் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்புறம் உள்ள சுவரில் படங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பின்புறம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத எளிய அல்லது ஒரே மாதிரியான நிற பின்னணியில் நின்று முகத்தை ஸ்கேன் செய்யவும்.
3. செயலி அப்டேட் மற்றும் மொபைல் அமைப்புகள்:
* கூகுள் ப்ளே ஸ்டோரில் Aadhaar FaceRD செயலி சமீபத்திய பதிப்பில் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
* செயலியை பதிவறக்கம் செய்த பிறகு மொபைலில் Settings -> Apps -> Jeevan Pramaan / Aadhaar FaceRD சென்று கேமரா அனுமதிக்கு ‘Allow’ செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
* மொபைலில் உள்ள முன்புற கேமராவில் உள்ள தூசி அல்லது கைரேகையை மென்மையான துணியால் துடைத்தால் ஸ்கேன் செய்யும் போது முகம் தெளிவாக தெரியும்.
ஒருவேளை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் போது உங்கள் புகைப்படம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால் பின்வரும் மாற்று வழிகளை முயற்சி செய்யுங்கள்.
1. குடும்பத்தினர் மொபைலில் ஸ்கேன் செய்யலாம்:
உங்கள் மொபைலில் கேமராவின் தரம் குறைவாக இருந்தால், தரமான மற்றும் தெளிவாக கேமரா கொண்ட வேறொரு ஸ்மார்ட்போனில் Jeevan Pramaan மற்றும் Aadhaar FaceRD செயலிகளை நிறுவி, லாகின் செய்து ஸ்கேன் செய்யலாம்.
2. பயோமெட்ரிக் கைரேகை அல்லது கருவிழி ஸ்கேனர்:
மொபைல் ஸ்கேனிங்கில் உங்கள் முக அடையாளம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், மாற்று வழியாக கைரேகை அல்லது கருவிழி ஸ்கேனர் பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம்.
3. இ-சேவை மையங்கள்:
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
4. தபால் அலுவலகம்:
மிகக் குறைந்த கட்டணத்தில் தபால்காரர் உங்கள் வீட்டிற்கே வந்து கைரேகையைப் பதிவு செய்து, வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்யும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. வங்கி சேவை:
உங்களுக்கு பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும் வங்கி கிளைக்குச் சென்றும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.