உச்ச நீதிமன்றம் தந்த ட்விஸ்ட்! கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேரின் அரசு வேலை தப்பியது!

"மனிதாபிமான உதவி வழங்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதா?" - சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் மனுதாரர்களுக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம்!
VIJAY
VIJAY Image source: oneindia
Updated on

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு அரசு வழங்கிய அரசு வேலையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநில அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை மத்திய அமலாக்கப் பிரிவு/மத்திய புலனாய்வுத்துறை வசம் மாற்றப்பட்டு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வைக் குழுவின் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினரில் தகுதியுள்ள ஒருவரைத் தேர்வு செய்து 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை ஜூலை 27ஆம் தேதி முதலமைச்சர் வழங்கினார்.

இந்த பணி நியமனம் குறித்து பல்வேறு வகையான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்த நிலையில் இந்த பணி நியமனங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திரு முருகன், மதுரையைச் சேர்ந்த சீனி முகமது, திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.அதில், கருணை அடிப்படையில் இவ்வாறு அரசுப் பணிகளை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பணி நியமன ஆணைகளை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று, நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வேலையை அரசு வழங்க விரும்புவதில் உயர்நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சனை என்றும், இதனைப் பொதுநல வழக்காகக் கொண்டு வர முடியாது என்றும் வாதிட்டார்.

Supreme Court
Supreme Court

மனுதாரர் தரப்பில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், நீதிபதிகளும் மனுதாரர் தரப்பிற்குச் சரமாரி கேள்விகளை எழுப்பியதுடன் "ஒரு துயரச் சம்பவத்தில் மக்கள் உயிரிழந்த போது, அவர்களுக்கு உதவவும் பண இழப்பீடு அல்லது வேலை வழங்கவும் அரசு முடிவெடுத்தால், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தவர் உயிரிழந்தால், அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ அரசு வேலை கொடுக்கக்கூடாதா?" என்று காட்டமாக கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், இதில் அரசியல் மற்றும் நலன் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டவுடன் நீதிபதி அதற்கு பதிலாக "இங்கே அரசியலைக் கொண்டு வராதீர்கள்; இது ஒரு துயரச் சம்பவம், இதில் அரசியல் செய்யக்கூடாது" என்று கடுமையாக அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதை எதிர்ப்பது ஏன் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

குறிப்பாக " தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எப்படி தன்னிச்சையாகத் தலையிட முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வியைப் பதிவு செய்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டி வந்த ஒரே நபர் உயிரிழந்தால் அந்த முழு குடும்பமே நடுத்தெருவிற்கு வந்துவிடும், அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு உள்ளது?" என சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்ததுடன் அரசு வேலை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரரைப் பார்த்து, "கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்?" என மிகக் கடுமையான தொனியில் கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விசாரணை முடிவில், அரசு பணி நியமன அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு இருதரப்பிற்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

இதையும் படியுங்கள்:
இனி ஆம்புலன்ஸ் தாமதமானால் ரூ.10,000 அபராதம்: NHAI அதிரடி உத்தரவு!
VIJAY
இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 10,000 வேலைவாய்ப்புகள்! சென்னையில் மாபெரும் ‘Mega Job Fair’..!!
VIJAY
logo
Kalki Online
kalkionline.com