

பொதுவெளியில் அழகாக காட்டிக் கொள்வதையே பலரும் விரும்புவர். குறிப்பாக ஆண்களை விடவும் பெண்கள் தான் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக சந்தையில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
முகம் பளிச்சென்று பிரகாசிக்க வேண்டும்; முகப்பருக்கள் இன்றி வழவழப்பாக இருக்க வேண்டும் என்பதே பல பெண்களின் விருப்பம். இதற்காக அவர்கள் அதிகம் நம்புவது அழகு சாதனப் பொருட்களைத் தான்.
இருப்பினும் சந்தையில் போலியான அழகு சாதனங்களும் விற்பனைக்கு வருவதால், எந்தப் பொருளை வாங்குவதற்கு முன்பாகவும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து வாங்குவது நல்லது. இல்லையேல் இதனால் வரும் பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். இப்படித் தான் ஆலோசிக்காமல் ஒரு அழகு சாதனப் பொருளை வாங்கிய கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இன்ஃபுளூயன்ஸர்கள் விளம்பரப்படுத்திய முகப்பொலிவு கிரீமை வாங்கிப் பயன்படுத்திய கேரளாவைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு கடுமையான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் டிவியில் தான் விளம்பரங்களை அதிகமாக பார்ப்போம். ஆனால் இன்று அப்படி இல்லை. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதால் டிஜிட்டல் விளம்பரங்கள் அதிகரித்து விட்டன. பெரும்பாலும் டிவியில் வரும் விளம்பரங்கள் தான் கூகுள் பக்கங்களில் வரும். ஆனால் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களில் எது உண்மை? எது பொய் என்பதைக் கண்டறிவதே கடினம்.
இது போதாதென்று யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்களும் பணத்திற்காக சில பொருட்களை விளம்பரப்படுத்துகின்றனர். இன்ஃபுளூயன்ஸர்களை பின்தொடரும் இளைஞர்களும், இளம்பெண்களும் இதனை அப்படியே நம்பி விடுகின்றனர். இன்று கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் இதனால் வந்த விளைவு தான்.
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தனர். போலியான முகப்பொலிவு கிரீமைப் பயன்படுத்திய உங்கள் பெண்ணுக்கு சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.
தொடர்ந்து சோதித்த மருத்துவர்கள் அப்பெண்ணிடம் இதுபற்றி கேட்கும் போது, இன்ஸ்டாகிராமில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
முகப்பரு நீக்கம், முகப்பொலிவு மற்றும் நிறமி மாற்றங்களை நீக்கும் என சில பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் செய்த விளம்பரத்தை இளம்பெண் பார்த்துள்ளார். இதனை உண்மையென நம்பி வீடியோவில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்துள்ளார்.
சற்றும் ஆலோசனை செய்யாமல் பிரபலங்கள் சொன்னதை நம்பி, இந்த கிரீமை இளம்பெண் தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இன்று அதன் எதிர்மறை விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பெண்களே! இனியாவது ஆன்லைனில் விற்கும் பொருட்களை அப்படியே நம்பி வாங்கி விடாதீர்கள். அதில் போலியானவையும் இருக்கலாம். ஆகையால் வாங்குவதற்கு முன்பு, நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் தரத்தை ஆராயுங்கள். தரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், அப்பொருளை வாங்கும் எண்ணத்தையே விட்டு விடுங்கள்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.