

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அழகு சாதனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள் முன்னிலையில் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம். ஆனால் சந்தையில் போலியான அழகு சாதனங்களும், பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அழகு சாதனங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆகையால் பொதுமக்கள் அழகு சாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 2 அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் Goree ப்யூட்டி கிரீம் மற்றும் Chandini Whitening கிரீம் ஆகிய 2 அழகு சாதனப் பொருட்களுக்கும் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
இந்த 2 அழகு சாதனப் பொருட்களும் அதிகளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் இதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு திடீர் எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளது.
Goree மற்றும் Chandini ஆகிய 2 அழகு சாதன கிரீம்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து முறையான உரிமம் மற்றும் தரச் சான்றிதழ் இன்றி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
கள்ளச்சந்தை வழியாக விற்பனைக்கு வரும் இந்த கிரீம்களை மக்கள் பயன்படுத்தக் கூடாது. அரசால் அங்கீகரிக்கப்படாத கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் பல 100 மடங்கு பாதரசம் மற்றும் காரீயம் இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக முகத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றுவதற்காக இந்த கிரீம்களில் வலுவான கார்டிகோ-ஸ்டீராய்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நச்சுக் கலவையை சரும மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
சருமத்தில் ஏற்படும் பக்க விளைவுகள்:
அதிக நச்சு கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினால் சருமம் மிக மெலிதாக மாறுதல், கடுமையான முகப்பருக்கள், தோலில் மிக எளிதாக வெடிப்புகள் ஏற்படுதல் மற்றும் தோல் சிவந்து எரிச்சல் உண்டாகும்.
நிறமாற்றம்:
தொடக்கத்தில் முகம் மிளிர்வது போல் தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல சூரிய ஒளி படும் போது, உங்கள் சருமம் கருநீலம் அல்லது கரும் புள்ளிகளுடன் நிரந்தர பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
உடல் உறுப்பு பாதிப்புகள்:
பாதரசமானது தோல் வழியாக ரத்தத்தில் உறிஞ்சப்படும். இதனால் நாளடைவில் நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அங்கீகாரம் பெறாத போலியான அழகு சாதன கிரீம்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும், இவற்றை உடனே ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்கவும் சைபர் கிரைம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன. இதையும் மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலியான இந்த கிரீம்களை ஏற்கனவே பயன்படுத்தி சரும எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் உடனே தோல் மருத்துவரை அணுகுங்கள்.
அரசின் அனுமதியோடு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிம எண் அச்சிடப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.