
இந்தியா மட்டுமல்ல நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறைகளும், பாலியல் அத்துமீறல்களும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. வெளி நபர்கள் மட்டுமின்றி தனது தந்தை, சகோதர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளை வெளியில் சொல்ல தயக்கம் காட்டுவதால்தான் இன்று பல ஆண்கள் தவறு செய்துவிட்டு பயப்படாமல் சட்டத்தின் பிடியில் சிக்காமல் மேலும் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துகொண்டிருக்கின்றனர்.
2012-ல் டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி விரைவில் கோபமாக மாறி டெல்லியில் ஆயிரக்கணக்கான இளம் பெண்களும், ஆண்களும் நீதி கேட்டு கடும் குளிரையும் பெருட்படுத்தாமல் போராட்டத்தில் குதித்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் 2020 மார்ச் 20-ம்தேதி தூக்கிலிடப்பட்டனர்.
இது போன்ற ஒரு சம்பவம் தான் மேற்கு வங்காளத்தில் நடந்தது. கடந்தாண்டு ஆகஸ்டு 9-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்தன.
அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.
மிகவும் வேகமாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், ஜனவரி 18-தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியதுடன் அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 20-ம்தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த 18-ம்தேதி தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்காள அரசுக்கு நீதிபதி அனிர்பன் தாஸ் உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர், தங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்று கைகளை கூப்பி கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதி, சட்டப்படி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார். இந்த தொகையை தங்கள் மகள் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கான இழப்பீடாக குடும்பத்தினர் பார்க்கக்கூடாது என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.
கொல்கத்தா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிருப்தி அளிப்பதாக பெண் டாக்டரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு வாழ உரிமை இல்லை என்று பெண் டாக்டரின் தாயார் கூறியுள்ளார்.
சஞ்சய் ராய் மட்டும் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க முடியாது என்றும் மற்றவர்கள் நீதியிலிருந்து தப்பிக்க கூடாது என்றும் நீதிமன்றத்தில் திரண்டிருந்த டாக்டர்கள், போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.